Saturday, December 17, 2011

இந்தியா - அவுஸ்திரேலியா பயிற்சி போட்டி சமன்

இந்திய அணியின் சச்சின், லட்சுமண், ரோகித் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி போட்டி சமனானது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 26ம் திகதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இதற்கு தயாராகும் விதத்தில் கிரிக்கட் அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடியது. கான்பெராவில் நடந்த இப்போட்டியின் முதல் நாளில், அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 398 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
நேற்று இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ரகானே(3) ஏமாற்றம் தந்தார். காம்பிர் 35 ஓட்டங்கள் எடுத்தார். அணித்தலைவர் டிராவிட்(45) அரைசத வாய்ப்பை இழந்தார்.
பின் இணைந்த சச்சின், லட்சுமண் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 92 ஓட்டங்கள் எடுத்த சச்சின், அரைசதம் கடந்த லட்சுமண்(57) இருவரும், மற்ற துடுப்பாட்டவீரர்களுக்கு வழிவிட்டு “ரிட்டையர்டு ஹர்ட்” முறையில் பெவிலியன் திரும்பினர்.
விராத் கோஹ்லி(1) நிலைக்கவில்லை. அடுத்து ரோகித் சர்மா, சகா இருவரும் இணைந்து மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 83.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 320 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் போட்டி சமன் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அரைசதம் கடந்த ரோகித் சர்மா 56 ஓட்டங்களுடனும், சகா 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

No comments:

Post a Comment