Saturday, February 25, 2012

அனில் கும்ளே மீது மோசடி வழக்கு: உயர்நீதிமன்றம் விசாரணை

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அனில் கும்ளே மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் மீது தொழிலதிபர் குமார் வி. ஜகிர்தார் என்பவர் பாரதிநகர் காவல்நிலையத்தில் மோசடி வழக்கு கொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது, தன்னுடைய முன்னாள் மனைவி சேதனா, அனில் கும்ளே ஆகியோர் எனது மகளின் கடவுச்சீட்டு புதுப்பிப்பதில் முறைகேடு செய்துள்ளனர்.
எனது கையெழுத்தை கும்ளே முறைகேடாக அதில் போட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த கர்நாடக உயர் நீதிமன்றம், இது குறித்து விசாரணை நட‌த்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த தொழிலதிபர் குமார் வி. ஜகிர்தார் அனில் கும்ளே மனைவியின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேவாக்குடன் எந்தவித கருத்து மோதலும் இல்லை: தோனி

இந்திய கிரிக்கட் அணித்தலைவர் தோனி எனக்கும், ஷேவாக்கிற்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டி தொடர் நடைபெற்று வருகின்றது.
நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் இன்று அணித்தலைவர் தோனி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
தோனி கூறியதாவது, இந்திய அணி வீரர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது என்று பத்திரிகைகள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன. அணியின் மூத்த வீரர்கள் குறித்து நான் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி எதுவும் உண்மையல்ல. இந்த மாதிரியான செய்திகள் வீரர்களுக்கிடையே தடுமாற்றத்தை உண்டாக்குகிறது.
மேலும் ஷேவாக்குடன் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. அணியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.
அணியில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். ஒற்றுமையுடன் விளையாடி நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக உள்ளது என்று தெரிவித்தார்.

6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் ஓருநாள் கிரிக்கட் போட்டி இன்று வெல்லிங்டனில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராப் நிகோல் 30 ஓட்டங்களும், மார்டின் குப்தில் 7 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்கல்லம் 56 ஓட்டங்களும், வில்லியம்சன் 55 ஓட்டங்களும், மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கியது.
தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆம்லா 8 ஓட்டங்களும், ஸ்மித் 9 ஓட்டங்களும், கல்லிஸ் 13 ஓட்டங்களும், ஜீன் பால் டுமினி 46 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
டி வில்லியர்ஸ் சதத்தை கடந்து 106 ஓட்டங்களுடனும், பிளஸ்ஸிஸ் 66 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் 45.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.

புனே வாரியர்ஸ் அணியில் சாமுவேல்ஸ்









ஐ.பி.எல் டி20 தொடருக்கான புனே வாரியர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து பெங்களூரில் கடந்த 4ம் திகதி நடந்த வீரர்கள் ஏலத்தை புனே வாரியர்ஸ் புறக்கணித்தது.
பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, புனே அணியில் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய இம்மாதம் 29ம் திகதி வரை அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து புனே அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் 5வது சீசன் முதல் பாதி லீக் ஆட்டங்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சாமுவேல்ஸ் முதல் முறையாகக் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் இதுவரை 42 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு 1128 ஓட்டங்கள் எடுத்துள்ளார்(வேகம்: 121.68). புனே அணியில் மேலும் 3 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளனர்.

சச்சின் ஓய்வு பெறுவது எப்போது?

இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
பல்வேறு சாதனைகளை படைத்த சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வலுப்பெற்று வருகிறது.
தற்போது நடந்து முடிந்த அவுஸ்திரேலிய கிரிக்கட் டெஸ்ட் தொடரில் ஐந்து இன்னிங்சில் மொத்தம் 90 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு ‌ஒரு நாள் போட்டியில் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் இந்தியா கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
அவ்வாறு வெற்றி பெறும் பட்சத்தி்ல் இந்த வெற்றிக்கு பின்னர் ஒய்வு அறிவிக்‌கலாம் என்றும், தோல்வியடையும் பட்சத்தில் அடுத்து டாகாவில் நடைபெற உள்ள ஆசிய கிண்ணத்திற்கான போட்டி முடிவுக்கு பின்னர் ஓய்வு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடத்திற்கு முன்னேறிய இலங்கை அணி

முத்தரப்பு தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி ஓவரில் அபாரமாக வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
முத்தரப்பு கிரிக்கட் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
281 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய அணி 49.2 ஓவரில் 7 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில் 283 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முன்னதாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்கள் எடுத்தது.
இந்த அபாரமான வெற்றியால் 4 புள்ளிகள் பெற்ற இலங்கை அணி(1 போனஸ் புள்ளி), 15 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
மூன்று அணிகளுக்கும் தலா 2 லீக் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், சிட்னியில் நாளை நடக்க உள்ள போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

Saturday, February 18, 2012

முத்தரப்பு தொடரின் நாளைய போட்டி: சேவக் ஓய்வு

முத்தரப்பு தொடரின் நாளைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் விரேந்திர சேவக்கிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஏழாவது லீக் ஆட்டம் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவிருக்கிறது.
நாளைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் வீரேந்திர சேவக்கிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதனால் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், கவுதம் காம்பீர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தொடக்கவீரராக சச்சின் களமிறங்க இருப்பதன் மூலம், சத சாதனையை இப்போட்டியில் நிகழ்த்துவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சூதாட்ட புகாரில் பாகிஸ்தான் வீரர் கனேரியா சிக்கினார்

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் டேனிஸ் கனேரியாவுக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக லண்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் டர்ஹாம்-எக்ஸக்ஸ் அணிகளுக்கு இடையிலான் கவுன்டி போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தண்டனை பெற்றுள்ள எக்ஸக்ஸ் அணியின் முன்னாள் வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்டு, கனேரியா மூலமாகவே சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று அரசு வழக்குரைஞர் நிஜெல் பீட்டர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கனேரியா அணுகியதாலேயே வெஸ்ட்பீல்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட ஓவரில் 12 ஓட்டங்களை விட்டுக்கொடுக்குமாறு வெஸ்ட்பீல்டிடம், கனேரியா தெரிவித்துள்ளார் என்றும் நிஜெல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2010-ம் ஆண்டு இந்த வழக்குத் தொடர்பாக கனேரியா கைது செய்யப்பட்டாலும், எவ்வித தண்டனையுமின்றி விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் இப்போது அவருக்கு தொடர்பிருப்பதாக வழக்குரைஞர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் கிரிக்கட் அணியில் கனேரியா சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் சூதாட்டப் புகாரில் சிக்கி சிறைத் தண்டனை பெற்றுள்ள நிலையில், இப்போது கனேரியா சிக்கியுள்ளது பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் கிளார்க் ஓய்வு

இந்தியாவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் பங்கேற்க மாட்டார்.
இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஏழாவது லீக் ஆட்டம் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவிருக்கிறது.
கால் தசைநாரில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மைக்கேல் கிளார்க் ஞாயிற்றுக்கிழமை பிரிஸ்பேனில் நடக்க இருக்கும் இந்தியாவுக்கெதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் முழுமையாக குணமடைந்த பின்னர் தான் விளையாட விரும்புவதாக கிளார்க் தெரிவித்துள்ளார். கிளார்க் விளையாடாத பட்சத்தில் பிரிஸ்பேன் ஒருநாள் போட்டிக்கும் பாண்டிங்கே அணித்தலைவராக இருப்பார்.
இந்நிலையில் இளம் அவுஸ்திரேலிய வீரரான மிட்செல் மார்ஷ் கீழ்முதுகில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
20 வயதான மார்ஷ் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது முதுகுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மார்ஷின் கீழ் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
மார்ஷுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை நாளை பரிசோதிப்பதாகக் கூறியுள்ள மருத்துவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு அவர் விளையாட முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரித்துள்ளனர்.

முதல் 20-20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் 20-20 கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரிச்சர்டு லெவி 13 ஓட்டங்களும், ஹாசிம் ஆம்லா 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ஜுஸ்டின் ஆன்டாங் 32 ஓட்டங்களும், ஜே.பி. டுமினி 41 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியின் நேதன் மெக்கல்லம், ரோன்னி ஹிரா இருவரும் தலா 1 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. மெக்கல்லம் 16 ஓட்டங்களும், கேன் வில்லியம்சன் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மார்டின் குப்தில் மட்டும் நிலைத்து நின்று ஆடி 5 பவுண்டரி 4 சிக்சர் அடித்து 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மார்டின் குப்தில் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Thursday, February 16, 2012

பாகிஸ்தானுடனான 2ஆது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபியில் புதன்கிழமை பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் அலஸ்டயர் குக் 102 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 230 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.அவ்வணியின் சார்பில் அதிகபட்சமாக இம்ரான் பர்ஹாத், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் தலா 47 ஓட்டங்களைப் பெற்றனர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஸ்டீவன் பின் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அலஸ்டயர் குக் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
இத்தொடரின் முதல் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் அவ்வணி 2-0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது

இளம் பந்துவீச்சாளர்களை தேடும் பணியில் பிசிசிஐ

இளம் பந்துவீச்சாளர்களை இந்திய அணிக்கு தேடும் பணியில் இந்திய கிரிக்கட் வாரியம் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் தேசிய கிரிக்கட் அகாதெமியின் உறுப்பினர்களால் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் இந்த முகாம்கள் நடைபெறவிருக்கின்றன. 17 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று இந்திய கிரிக்கட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18, 19 ஆகிய திகதிகளில் தர்மசாலாவிலும், 22, 23 ஆகிய திகதிகளில் ஜம்முவிலும், 25, 26 ஆகிய திகதிகளில் ராஞ்சியிலும், 28, 29 ஆகிய திகதிகளில் ராய்ப்பூரிலும் தெரிவு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமை முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் கர்சன் காவ்ரி, யோகிந்தர் புரி ஆகியோர் கண்காணித்து திறமையான வீரர்களின் பட்டியலை இறுதி செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவர்கள் தவறு செய்வது சகஜம் தான் : ஐசிசி

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் மலிங்கா 5 பந்துகள் வீசிய நிலையில் ஓவர் முடிந்ததாக நடுவர் அறிவித்ததை பெரிதுபடுத்த வேண்டாம் என்று சர்வதேச கிரிக்கட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் நடுவர்கள் குழு இழைத்த இந்தத் தவறு மிகவும் சகஜமானதுதான் என்றும் கூறியுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கட் வாரிய செய்தித் தொடர்பாளர் டெய்லி டெலிகிராப் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், வீரர்களைப் போன்றே நடுவர்களும் மனிதர்கள் தான். அதனால் சில நேரங்களில் தவறு ஏற்பட்டு விடுகிறது.
நடுவரின் தீர்ப்பை பொறுத்தவரையில் கொடுத்தது கொடுத்ததுதான். அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.
டி.ஆர்.எஸ் முறையை அமுல்படுத்த இந்தியா தொடர்ந்து மறுத்து வருவதும் இந்தத் தவறுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முத்தரப்புத் தொடரில் இலங்கைக்கு எதிராக இந்தியா துடுப்பெடுத்தாடிய போது, ஆட்டத்தின் 30வது ஓவரை மலிங்கா வீசினார்.
5 பந்துகள் வீசிய நிலையில் ஓவர் முடிந்ததாக நடுவர் நைஜெல் லாங் அறிவித்தார். அந்த ஓவரில் இந்தியா 9 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

முத்தரப்பு தொடரில் எனக்கு ஓய்வு வேண்டாம்: ஹாரிஸ் வேண்டுகோள்

முத்தரப்பு தொடரில் விளையாடுவதற்கு முழு உடற்தகுதியுடன் உள்ளேன். எனக்கு ஓய்வு வேண்டாம் என ரியான் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இதில் அடுத்து வரும் இலங்கை, இந்தியா அணிக்கு எதிரான போட்டிகளில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிசிற்கு ஓய்வு தரப்பட்டது. இதுகுறித்து ஹாரிஸ் கூறியதாவது, முன்னர் ஏற்பட்ட காயங்களின் போது போதுமான ஓய்வு எடுத்துள்ளேன். இப்போது எனக்கு எவ்வித காயமும் இல்லை. இதை நிரூபிக்கவும் தயாராக உள்ளேன். நான் நன்றாகவே உள்ளேன். இந்நிலையில் அடுத்த இரு போட்டியில் இருந்து எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்படி செய்துள்ளனர் என்ற தேர்வாளர்கள் நோக்கம் புரிகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஓய்வு தேவையில்லை. பந்துவீசவில்லை என்றால் சோர்வடைந்து விடுவேன்.
நன்றாக பந்துவீசவில்லை என்றால் உடனடியாக ஓய்வு தரக்கூடாது. இது எனது மனநிலையை எதிர்மறையாக மாற்றிவிடும். தொடர்ந்து விளையாடவே விரும்புகிறேன்.
எனது வேண்டுகோளை கிரிக்கட் ஆஸ்திரேலியா(சி.ஏ) ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த வாரம் அல்லது அடுத்து என விரைவில் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
கடந்த 3 போட்டிகளில் 128 ஓட்டங்கள் கொடுத்து, 2 விக்கெட் மட்டுமே ஹாரிஸ் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு குவியும் பாராட்டுகள்

ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி போட்டியை வென்று தரும் மேட்ச் வின்னராக இந்தியாவின் அணித்தலைவர் தோனி உள்ளார்.
ஒருநாள் கிரிக்கட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. ரன்ரேட் அதிகமாக தேவைப்படும், பின்வரிசையில் வரும் போது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.
எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். இவை அனைத்தையும் மீறி இந்திய அணித்தலைவர் தோனி சிறப்பாக செயல்படுகிறார் என்றால் முதல் காரணம் இவரது கூல் பாணி தான்.
தற்போதைய முத்தரப்பு தொடரில் கடைசி நேரத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதே போன்று இலங்கைக்கு எதிராக 3 ஓட்டங்கள் எடுத்து போட்டி டை ஆக காரணமாக இருந்தார்.
தோனியை பொறுத்தவரை இரண்டாவதாக துடுப்பெடுத்து ஆடும் போது அசத்துகிறார். சேஸ் செய்த போது 49 இன்னிங்சில் இவரது அபார ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது.
இதில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1993 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 104.89 ரன்கள். இந்த 49 இன்னிங்சில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், சேஸ் செய்த போது 50 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். மொத்தம் இவர் எடுத்த 7 சதம், 44 அரைசதத்தில் பெரும்பாலானவை சேஸ் செய்த போது எடுத்தது தான்.
அணித்தலைவர், விக்கெட் கீப்பர், துடுப்பாட்ட வீரர் என்ற பணிகளுடன், போட்டியை வெற்றிகரமாக முடித்து தருவதிலும் தோனி கெட்டிக்காரராக உள்ளார்.
இதுகுறித்து இலங்கை அணியின் தலைவர் ஜெயர்வர்தனா கூறுகையில், அடிலெய்டு போட்டியில் ஒரு இன்ச் அளவில் போட்டியை எங்களிடம் இருந்து தோனி தட்டிப்பறித்தார். அமைதி மற்றும் நிதானமாக செயல்படும் குணம் இவரை வலிமையானவராக மாற்றியுள்ளது என்றார்.
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் கூறுகையில், தோனி அசத்தலான வீரர். புள்ளிவிவரங்களை பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். மெக்கேயின் கடைசி ஓவரில் சிக்சர் அடித்தது மறக்க முடியாதது என்றார்.

பாகிஸ்தானுக்கு 251 ஓட்டங்கள் இலக்கு


இங்கிலாந்துக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் 251 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

அபுதாபியில் நடைபெற்று வரும் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையான 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்து வருகிறது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் குக் கெவின் பீட்டர்சன் சிறப்பாக விளையாடினர். பீட்டர்சன் 26 ஓட்டங்களும், அதன் பின் களமிறங்கிய ட்ராட் 23 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் போபரா, கப்டன் குக் ஜோடி பாகிஸ்தானின் பந்துவீச்சை பொறுமையாக கையாண்டு அணியின் ஓட்டங்களை வெகுவாக உயர்த்தினர்.
அணித்தலைவர் குக் சதம் அடித்தார் 102 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார், ஆட்டத்தின் கடைசி பந்தில் போபரா 58 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
இறுதியில் 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 250 ஓட்டங்கள் எடுத்தது.
251 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது கபிஸ் 26 ஓட்டங்களும், இம்ரான் பர்கட் 47 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்
அதன் பின் களமிறங்கிய அஸர் அலி 31 ஓட்டங்களிலும், யூனிஸ்கான் 5 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மிஸ்பா உல் கக் 28 ஓட்டங்களும், உமர் அக்மல் 16 ஓட்டங்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி தற்போது 35 ஓவர் முடிந்துள்ள நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இன்னும் 15 ஓவர்களில் 100 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

Friday, February 3, 2012

இந்தியாவின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி : அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
மெல்பேர்ன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 131 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆரோன் பின்ச் 23 பந்துகளில் 36 ஓட்டங்களையும் மத்தியூ வாட் 29 பந்துகளில் 32 ஓட்டங்களையும் டேவிட் ஹஸி 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சாளர்களில் பிரவீன் குமார் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ராகுல் சர்மா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணியின் சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌதம் காம்பீர் 60 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்றார்.
வீரேந்தர் ஷேவாக் 16 பந்துகளில் 23 ஓட்டங்களையும் வீரட் கோலி 24 பந்துகளில் 31 ஓட்டங்களையும் அணித்தலைவர் டோனி 18 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
2 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டியது. அதனால் இத்தொடர் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றது.

சேவக், ஹோக்லியை அணித்தலைவராக நியமிக்கலாம்: அசாருதீன்

இந்திய அணிக்கு டெஸ்ட் அணித்தலைவராக சேவக் அல்லது வீராத் ஹோக்லியை நியமிக்கலாம் என முன்னாள் கிரிக்கட் வீரர் அசாருதீன் கூறியுள்ளார்.
வெளிநாட்டு மைதானங்களில் தொடர் தோல்வி அடையும் இந்திய அணி குறித்து  அசாருதீன் கூறுகையில், தற்போது இந்திய அணிக்கு திறமையான வீரர்கள் தேவை. மூத்த வீரர்களுக்கு நல்ல பெயரும் புகழும் இருக்கிறது. ஆனால் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான நேரம்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி ஏற்பட்ட உடனே இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. இதுபற்றி கிரிக்கட் வாரியம் தான் யோசிக்க வேண்டும். இந்திய அணிக்கு கிடைத்த நல்ல அணித்தலைவர் டோனி. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அணியை நல்ல நிலையில் வைத்திருந்தார். ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது திறமை வெளிப்படவில்லை என்பது உண்மை.
இதை இந்திய கிரிக்கெட் வாரியம் கவனிக்க வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் என்ன நினைக்கிறேன் என்றால் அணிக்கு தனித்தனி அணித்தலைவர்கள் தேவை.
டெஸ்ட் அணிக்கு சேவக் அல்லது வீராட் கோலியை நியமிக்கலாம். டெஸ்ட் அணியை வழிநடத்தி செல்லும் திறமை அவர்களுக்கு இருக்கிறது என்றார்.

சம்பளமின்றி அணிக்காக விளையாடும் இலங்கை வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய நேரத்திற்கு ஊதியம் வழங்கப்படாத போதிலும் இவ்விளையாட்டின் மீதுள்ள காதல் காரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் பாங்க் கிண்ணத்திற்கான முக்கோண ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விளையாடவுள்ளனர்.
உலகக் கிண்ணம் மற்றும் இங்கிலநர்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடனான போட்டிகளில் விளையாடியமைக்காக இலங்கை வீரர்களுக்கு 23 லட்சம் டொலர்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இப்பின்னணியிலேயே அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுடனான சுற்றுப்போட்டியிலும் இலங்கை வீரர்கள் விளையாடவுள்ளனர்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிதி நெருக்கடியினால், இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியில்லாவிட்டால் கிரிக்கெட் வீரர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாமல் போகலாம் என சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அச்சம் கொண்டுள்ளதாக சிட்னி மோர்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் இலங்கை வீரர்களுக்கான கொடுப்பனவில் ஒருபகுதியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அமைப்புக்கூடாக இல்லாமல் வீரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் வைப்பிலிட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வீரர்கள் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஊதியமாக 5000 டொலர்களை பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சங்கத்தின் பொதுச்செயலாளர் கென் டி அல்விஸ் கூறியுள்ளார். இதன்படி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சுற்றுப்போட்டிக்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வீரர்களுக்கு குறைந்தபட்சம் 480,000 டொலர்களை ஊதியமாக வழங்க வேண்டும்.