Saturday, December 31, 2011

சிட்னி மைதானம் எனக்கு பிடிக்கும் : சச்சின்

இந்தியாவுக்கு வெளியில் தனக்குப் பிடித்த மைதானம் அவுஸ்திரேலியாவின் சிட்னிதான் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 முதல் 7 வரை நடைபெறுகிறது. இதற்காக சிட்னி வந்துள்ள அவர் மேலும் கூறியது: 

சிட்னி மிக அற்புதமான மைதானம். சிறந்த இடம். இங்குள்ள சூழல்களை நான் பெரிதும் விரும்புகிறேன். நான் மிகவும் சிறப்பாக விளையாடியதாக உணரும் மைதானங்களில் சிட்னியும் ஒன்று என்றார். 

சச்சின் தனது 22 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 59 மைதானங்களில் விளையாடியிருந்தாலும், சிட்னியே தனக்குப் பிடித்தமான மைதானம் என்று கூறியுள்ளார். 

இங்கு அவர் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஓர் இரட்டைச் சதமும், இரண்டு சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான ஒருநாள் தொடரிலிருந்து மார்க் பௌச்சர் நீக்கம்

இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான தென்னாபிரிக்க அணியிலிருந்து விக்கெட் காப்பாளர்  மார்க் பௌச்சர், சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், துடுப்பாட்ட வீரர் டேவிட் மில்லர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
35 வயதான மார்க் பௌச்சர் டெஸ்ட் போட்டிகளில் உலகில் அதிக எண்ணிக்கையானோரை (540) ஆட்டமிழக்கச் செய்த சாதனையாளராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் 423   பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலிய  அணியுடனான ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்றதையடுத்து இவ்வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
துடுப்பாட்ட வீரரும் பகுதி நேர சுழற்பந்துவீச்சாளருமான டீன் ஈக்லர், சகல துறை வீரர் ரோரி கிளெய்ன்வெல்ட் ஆகியோர் 14 பேர் கொண்ட குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி  11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஏபி டி வில்லியர்ஸ் ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டபின்னர் அவர் தலைமையில் அவ்வணி விளையாடும் முதலாவது ஒருநாள் தொடர் இதுவாகும்.
தென்னாபிரிக்க அணி விபரம்:
ஹஸிம் அம்லா, ஜொஹான் போதா, ஏபி டி வில்லியர்ஸ் (தலைவர்), ஜே.பி. டுமினி, பிராங்கோயிஸ் டூ பிளேஸிஸ், டீன் ஈக்லர், ஜக் கலிஸ், ரோரி கிளெய்ன்வெல்ட், மோர்ன் மோர்கெல், வெய்ன் பார்னெல், ரொபின் பீற்றர்சன், கிறேம் ஸ்மித், டேல் ஸ்டெய்ன், லோன்வாபோ சோட்சோப்.

100 சதவீதம் துல்லியமாகாத வரை டி.ஆர்.எஸ்.ஸுக்கு இந்தியா ஆதரவளிக்காது : டோனி

நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைமையானது (டி.ஆர்.எஸ்.) 100 சதவீதம் துல்லியமானது என இந்தியா நம்பும்வரை அம்முறைக்கு இந்தியா ஆதரவளிக்காது என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி கூறியுள்ளார்.
இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில் டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்த வேண்டுமென அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி அதற்கு சம்மதிக்கவில்லை.
மேல்பேர்னில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் கள நடுவர்களால் சில தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டபோது, டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்துவதற்கு இந்தியா மறுப்பு தெரிவிப்பது தொடர்பான விமர்சனங்கள் தீவிரமடைந்தன.  இந்நிலையிலேயே டோனி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த 'ஹொட் ஸ்பொட்' தொழில்நுட்பம் 100 சதவீதம் துல்லியமானவை எனக் கருதச் செய்யும் பல சம்பவங்கள்  இங்கிலாந்தில் இடம்பெற்றதாகவும் அவுஸ்திரேலியாவுடனான போட்டிகள் தொடர்பாக தான் மேற்கொண்ட தீர்மானத்திற்கு இங்கிலாந்து அனுபவமும் ஒரு காரணம் எனவும் டோனி கூறியுள்ளார்.
'நடுவர்கள் நீண்டகாலமாக அப்பணியை செய்து வருகின்றனர். தொழில்நுட்ப அதிகரிப்பால் அவர்களைச் சூழ்ந்த அழுத்தம் அதிகரிக்கிறது. இத்தொழில்நுட்பம் 100 சதவீதம் துல்லியமானவை அல்ல என நாம் கருதுகிறோம். இங்கிலாந்துடனான சுற்றுப்போட்டிக்கு முன்னர் நான் ஹொட்ஸ்பொட் தொழில்நுட்பத்தின் பெரிய விசிறியாக இருந்தேன். ஆனால், இங்கிலாந்தில் நடந்த விடயங்களால்,  நான் தொடர்ந்தும் அந்த நம்பிக்கையுடன் இல்லை'
இதில் 100 சதவீதம் உத்தரவாதம் இல்லை என்பதால் நான் தொடர்ந்தும் நடுவர்களின் தீர்ப்பையே விரும்புகிறேன். இது மனிதர்கள் தவறு செய்யும் ஒரு விளையாட்டு. பந்துவீச்சாளர் தவறு செய்யாவிட்டால் துடுப்பாட்ட வீரர் ஓட்டம் பெற முடியாது. துடுப்பாட்ட வீரர் தவறு செய்யாவிட்டால் பந்துவீச்சாளர் விக்கெட்டை பெற முடியாது. எனவே நடுவர்களை தொடர்ந்தும் இவ்விளையாட்டின் அங்கமாக நாம் கொண்டிருப்போம்' என டோனி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் படுதோல்வி: முடங்கி கிடக்கும் இந்திய அணி வீரர்கள்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 122 ஓட்டங்களில் மோசமாக தோற்றது.
இரு அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வருகிற 3ந் திகதி சிட்னியில் தொடங்குகிறது. மெல்போர்ன் டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இந்திய வீரர்கள் ஓட்டல் அறையிலேயே முடங்கி கிடக்கின்றனர். மீடியாக்கள், ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக இந்திய வீரர்கள் அறையிலேயே இருக்கின்றனர்.
இந்திய வீரர்கள் மெல்போர்னில் இருந்து இன்று சிட்னி புறப்பட்டு செல்வார்கள். சிட்னி துறைமுகத்தில் புத்தாண்டு கொண்டாடுவார்கள்.
நாளை பிற்பகல் இந்தியா- அவுஸ்திரேலியா வீரர்கள் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லரர்டை புத்தாண்டு தினத்தையொட்டி சந்திக்கிறார்கள். 2-வது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலியா அணியில் ரியான் ஹாரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Friday, December 23, 2011

இந்திய அணி வீரர்களுக்கு பிளட்சர் அறிவுரை

அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் உள்ளூர் மீடியாவின் தூண்டுதலுக்கு இந்திய இளம் வீரர்கள் பலியாகி விடக்கூடாது. தொடர் முடியும் வரை பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என வீரர்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் பிளட்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுவரை 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்தவர் பிளட்சர். தற்போது இந்தியாவுக்காக சென்றுள்ள இவர் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்.
கடந்த முறை இங்கிலாந்து அணியுடன் இவர் சென்ற போது, 87 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்தது.
இதுகுறித்து தி ஹெரால்டு சன் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அணியின் மூத்த வீரர்களுக்கு மீடியா மற்றும் களத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது நன்கு தெரியும்.
இதனால் இளம் வீரர்களுக்கு பிளட்சர் ஏகப்பட்ட அறிவுரைகள் வழங்கினார். களத்தில் யாருடனும் மோதக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். மீடியாவிடம் பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். உங்களின் கோபத்தை துடுப்பாட்டம், பந்துவீச்சின் போது வெளிப்படுத்துங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் வீரர்களின் தவறுகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது : ஸ்ரூவோட் லோ

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் களத்தடுப்பு தவறுகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாதென அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்ரூவோட் லோ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போது பங்களாதேஷ் வீரர்கள் பிடிகளை தவறவிட்டமை குறித்து ஸ்ரூவோட் லோ அதிர்ப்தி வெளியிட்டுள்ளார்.
முக்கிய வீரர்களின் பிடிகளை வீரர்கள் தவறவிடும் பட்சத்தில் அணிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பங்ளாதேஷ் அணி இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சச்சின் அடுத்த போட்டியில் 100 ஆவது சதத்தை பெற வேண்டும் : ஷேன் வோர்ன்

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை அடுத்த டெஸ்ட் போட்டியில் பெற வேண்டும் என தான் விரும்புவதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வோர்ன் கூறியுள்ளார்.
இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மெல்பேர்னில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சதத்தை அவுஸ்திரேலியாவில் பெறுவார் என தான் கருதுவதாகவும் ஆனால், அதை அவர் மெல்பேர்னில் சாதிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் ஷேன் வோர்ன் கூறினார்.
மெல்பேர்ன் கிரிக்கெட் அரங்கில் ஷேன் வோர்னின் வெண்கலச் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டபோது அவ்வைபவத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே ஷேன் வோர்ன் இவ்வாறு கூறினார்.
145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷேன் வோர்ன். எனினும் டெண்டுல்கரின் விக்கெட்டை 3 தடவைகள் மாத்திரமே ஷேன் வோர்ன் வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய ஷேன் வோர்ன் 45 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய - இந்திய போட்டியானது சச்சின் டெண்டுல்கரின்  185 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 48 சதங்களையும் அவர் பெற்றுள்ளார்.
இறுதியாக கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்காவுடனான உலகக் கிண்ணப் போட்டியின்போது அவர் சதம் குவித்தார்.
அவரின் இறுதி டெஸ்ட்  சதமும் தென்னாபிரிக்காவுக்கு எதிராகவே பெறப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்  போட்டியில் அவர் 145 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி நேற்று(21.12.2011) அறிவிக்கப்பட்டது. இதில் பொண்டிங், மைக்கேல் ஹசி உட்பட பல வீரர்கள் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் திகதி மெல்போர்னில் தொடங்குகிறது. இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பொண்டிங், மைக்கேல் ஹசி ஆகியோர் இடம் பெறுவது சந்தேகமாக இருந்தது. ஆனாலும் இவர்களது அனுபவத்துக்கு முக்கியத்துவம் அளித்து மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட தொடக்க வீரர் ஷான் மார்ஷ் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்த தொடக்க வீரர் டேவிட் வார்னர் இடம் பிடித்துள்ளார்.
இவரது முதுகுப்பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதால், உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் விளையாடும் லெவன் அணியில் இடம் பெறலாம்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய தொடக்க வீரர் கோவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அணியின் தலைவராக மைக்கேல் கிளார்க் நீடிக்கிறார்.
காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், வேகப்பந்துவீச்சாளர் ரேயான் ஹாரிஸ் தெரிவு செய்யப்படவில்லை. இதேபோல தொடக்க வீரர் பிலிப் ஹியுஸ், உஸ்மான் கவாஜா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
பிக் பாஷ் டுவென்டி-20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேகப்பந்துவீச்சாளர் பென் ஹில்பென்ஹாஸ் வாய்ப்பு பெற்றுள்ளார்.
பீட்டர் சிடில், மிட்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் பட்டின்சன் ஆகிய வேகங்களும் இடம் பிடித்துள்ளனர். சுழற்பந்துவீச்சாளராக நாதன் லியான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டராக டேனியல் கிறிஸ்டியன் இடம் பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர்-துடுப்பாட்ட வீரராக பிராட் ஹாடின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி: மைக்கேல் கிளார்க்(அணித்தலைவர்), ரிக்கி பொண்டிங், மைக்கேல் ஹசி, பிராட் ஹாடின்(விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், கோவன், டேனியல் கிறிஸ்டியன், பீட்டர் சிடில், பென் ஹில்பெனாஸ், ஜேம்ஸ் பட்டின்சன், மிட்சல் ஸ்டார்க், நாதன் லியான்.

Wednesday, December 21, 2011

இந்தியா - அவுஸ்திரேலியா இடையேயான இரண்டாவது பயிற்சி போட்டி சமன்

அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய வீரர் விராத் கோஹ்லி சதம் அடித்து அசத்தினார்.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி அவுஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 26ம் திகதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இதற்கு முன் இந்தியா, அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணிகள் மோதும் இரண்டாவது பயிற்சி போட்டி கான்பெராவில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று(20.12.2011) இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. ரோகித் சர்மா(47) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். அணித்தலைவர் தோனி(3) நிலைக்கவில்லை. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி சதம் அடித்தார். இவர் 132 ஓட்டங்கள்(18 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 269 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சேர்மன் லெவன் அணியின் ஹாலந்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
பின் முதல் இன்னிங்சை தொடங்கிய சேர்மன் லெவன் அணியின் தலைவர் வார்னரை(2), முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார்.
கவாஜா 25 ஓட்டங்கள் எடுத்தார். ஹியுஜ்(20), கூப்பர்(38), அஷ்வின் சுழலில் வீழ்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கோவன் சதம் அடித்தார். இவர் 109 ஓட்டங்களுக்கு அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய லெவன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலிய லெவன் அணி விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இரண்டாவது பயிற்சி போட்டியும் சமன் செய்யப்பட்டது.

வெற்றியை நோக்கி பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 154.5 ஓவர்களில் 470 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
மிஸ்பா உல் ஹக் 70, அட்னன் அக்மல் 53 ரன்கள் குவிக்க அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டியது.
132 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ûஸ விளையாடிய வங்கதேசம், 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட அந்த அணி இன்னும் 18 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 107.2 ஓவர்களில் 338 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ விளையாடிய பாகிஸ்தான் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் யூனிஸ் கான் மேலும் ஒரு ரன் மட்டுமே சேர்த்த நிலையில் 49 ரன்களில் வீழ்ந்தார். மிஸ்பா உல் ஹக் 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து வெளியேறினார். இது டெஸ்ட் போட்டியில் மிஸ்பா உல் ஹக் அடித்த 14-வது அரைசதம்.
பின்வரிசையில் ஆசாத் ஷபிக் 42, அட்னன் அக்மல் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் 470 ரன்களில் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 82 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வங்கதேசம்-114/5: 132 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ûஸ விளையாடிய வங்கதேச அணியில் தமிம் இக்பால் 21 ரன்களில் வீழ்ந்தார். உமர் குல் பந்துவீச்சில் சிலிப் திசையில் நின்ற மிஸ்பா உல் ஹக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் டி.வி.ரீபிளேயில் பார்த்தபோது பந்து பேட்டில்படவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர் வந்தவர்களில் ஷாரியார் நபீஸ் டக் அவுட் ஆனார். நஜ்முதீன் 12, மகமதுல்லா 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 4-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. நாசிர் ஹுசைன் 30, முஷ்பிகுர் ரஹிம் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் தரப்பில உமர் குல், சீமா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடைசி நாள் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கதேசம் தனது 2-வது இன்னிங்ஸில் விரைவாக விக்கெட்டுகளை இழந்துள்ளதால், பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கடைசி நாளான புதன்கிழமை, வங்கதேசத்தின் மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் மதிய உணவு இடைவேளைக்குள் வீழ்த்தும் பட்சத்தில் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற முடியும்.
காலையில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். அதனால் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வங்கதேசத்தை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் வங்கதேச வீரர் ஷகிப்: இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்ததோடு (144 ரன்கள்), 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ஷகிப் அல்ஹசன். இதன்மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் பாகிஸ்தானின் 7 விக்கெட்டுகளில் 5-ஐ அல்ஹசனே வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் 9-வது முறையாக 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தியுள்ளார் அல்ஹசன்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் வழங்கியது ஐ.சி.சி

உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியமைக்காக இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தில் 46  சதவீதத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி.) கடந்த 16 ஆம் திகதி வழங்கியுள்ளதாக 'கிரிக்இன்போ' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
20 லட்சம் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்காமல் வீரர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பிலிட்டுள்ளதாக தெரிய வருவதாகவும் கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியமைக்காக நாடொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தில் 25 சதவீதம் வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதன்படி இலங்கை வீரர்களுக்கு 43 லட்சம் டொலர் வழங்கப்பட வேண்டியிருந்தது.
இந்நிலையில் ஒவ்வொரு வீரருக்கும் வழங்கப்பட வேண்டிய தொகை மற்றும் வங்கிக் கணக்கு இலக்கங்களை ஐ.சி.சிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்திருந்ததாகவும் இக்கொடுப்பனவு குறித்து அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இக்கொடுப்பனவு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்கங்களின் சம்மேளனத்திற்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொனி ஐரிஸ் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஐ.சி.சி. 20 லட்சம் டொலர் வழங்க இணங்கியுள்ளதாகவும் அதன்மூலம் பயிற்றுநருக்கும் வீரர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட முடியும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார்.
உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக ஹம்பாந்தோட்டை, பள்ளேகலவில் இரு புதிய அரங்குகளை நிர்மாணிப்பதற்கும் ஆர்.பிரேமதாஸ அரங்கை புனரமைப்பதற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பணம் செலவிட்டதையடுத்து அந்நிறுவனம் 32.5 மில்லியன் டொலர் கடனில் சிக்கியுள்ளதால் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

Tuesday, December 20, 2011

இலங்கை அணியை பிரகாசிக்கவிடப்போவதில்லை : அலன் டெனால்ட்

இலங்கை கிரிக்கெட் அணியை தொடர்ந்தும் வேகப்பந்துவீச்சால் அச்சுறுத்தவுள்ளதாக தென் ஆபிரிக்க அணியின் பந்துவீச்சு பயிற்றுநரான அலன் டெனால்ட் சவால் விடுத்துள்ளார்.
அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணியை வேகப்பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்த எண்ணியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 81 ஓட்டங்களால் இலங்கை தோல்வியடைந்தது.
மூன்று நாட்களில் முடிவுக்குவந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியால் ஓர் இன்னிங்ஸில் கூட 200 ஓட்டங்களை எட்டமுடியவில்லை.
இதேநிலை அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தொடரும் எனவும், இலங்கை அணியை பிரகாசிக்கவிடப் போவதில்லை என்றும் அலன் டெனால்ட் குறிப்பிடுகிறார்.
இலங்கை பலமான அணி என்றாலும் தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த ஆடுகளங்களில் தமது வீரர்களால் பிரகாசிக்க முடியும் எனவும் அணியின் பந்துவீச்சு பயிற்றுநரான டொனால்ட் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி டேர்பனில் ஆரம்பமாகவுள்ளது.

சக வீரர் ரோஹித்துடன் எனக்கு போட்டி இல்லை : விராட் கோலி

ரோஹித் சர்மாவை எனது போட்டியாளராகக் கருதவில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடனான ஆட்டத்தில் இருவரும் இணைந்து 78 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எதிர்காலத்தில் இருவருமே இணைந்து இந்திய அணிக்காக விளையாட உள்ளோம். எனது போட்டியாளராக ரோஹித்தை கருதவில்லை.
என்னிடம் எப்போதுமே இதே கேள்வியைக் கேட்கின்றனர். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்க எப்போதுமே 2-3 பேர் காத்திருக்கின்றனர். நாங்கள் இருவருமே இணைந்து சிறப்பாக விளையாடி உள்ளோம். இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது. போட்டி இருந்தாலும் அது ஆரோக்கியமானதாகவே உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் 6-வது வீரராக இறங்குவதற்கு பதில் 4-வது வீரராக களம் இறங்கியது பயனுள்ளதாக இருந்தது.
விரைவிலேயே சில விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், 4-வது வீரராக களம் இறங்கி புதிய பந்தை எதிர்கொண்டது சிறப்பான பயிற்சியாக அமைந்தது. சில ஓவர்கள் வீசப்பட்டுவிட்டால், பந்து ஓரளவு பழையதாகிவிடும். அதன் பின்னர் ரன் சேர்ப்பது ஓரளவு எளிதாகும். அதனால்தான் வலைப்பயிற்சியில்கூட புதிய பந்தையே அதிகம் பயன்படுத்துகிறோம். ஜாகீர் கான், உமேஷ் யாதவ், வினய் குமார், அபிமன்யூ மிதுன், இஷாந்த் சர்மா ஆகியோர் வேகமாகவும், துல்லியமாகவும் பந்துவீசக் கூடியவர்கள். எனவே, அவர்களது பந்துவீச்சில் ரன் குவிப்பது அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சவாலானதாகவே இருக்கும்.
அவுஸ்திரேலிய அணியில் இப்போது பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒருகாலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அனுபவ வீரர்களின் திறமையுடன் புதிய வீரர்களின் திறமையை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. இளம் வீரர்கள் பிரகாசிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படும். இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடுவது என்பது அவுஸ்திரேலிய வீரர்களின் மனப்பான்மை. அந்த மனப்பான்மை புதிய வீரர்களிடமும் இருக்கும். அதனால், அவுஸ்திரேலியாவுடனான தொடர் பரபரப்பானதாகவே இருக்கும். அவுஸ்திரேலிய அணியில் இப்போதுள்ள இடம்பெற்றுள்ள வீரர்களும் ஆட்டத்தின் போக்கை மாற்ற வல்லவர்கள்தான். எனவே, புதிய வீரர்கள் என்பதால் அவர்களை குறைவாக மதிப்பிடமாட்டோம் என்றார் கோலி.

அவுஸ்திரேலியாவில் பிக்பாஸ் போட்டி: பொண்டிங் சொதப்பல்

அவுஸ்திரேலியாவில் 20-20 லீக் போட்டியான பிக்பாஸ் நடந்து வருகிறது. ஹோபர்ட் ஹரிக்கேன், பெர்த் ஸ்க்ராச்சர்ஸ் அணிகள் மோதின.
ஹோபர்ட் அணியில் தொடக்க வீரராக இறங்கிய பொண்டிங் 17 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
அந்த அணி 19.3 ஓவரில் 140 ஓட்டங்கள் எடுத்தது. ஆனால் பெர்த் அணி 109 ஓட்டங்களில் சுருண்டதால் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் அடிலெய்டு, மெல்போர்ன் அணிகள் மோதின. அடிலெய்டு 5 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்தது. அதன்பிறகு விளையாடிய மெல்போர்ன் 17.5 ஓவரில் 122 ஓட்டங்களில் சுருண்டதால் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு வெற்றி பெற்றது. மெல்போர்ன் அணியில் அப்ரிடி 9, அப்துர்ரசாக் 1 ஓட்டங்கள் எடுத்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக சதம் பெற்றது மகிழ்ச்சி: ஷகீப் அல் ஹசன்








பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் பெற்றமை குறித்து பங்களாதேஷ் அணி வீரர் ஷகீப் அல் ஹசன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
மீர்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை தொடர்பில் சற்று ஏமாற்றம் அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸில் 14 பௌண்ரிகள் அடங்கலாக 144 ஓட்டங்களை ஷகீப் அல் ஹசன் பெற்று அணியை வலுப்படுத்தியிருந்தார்.
இந்த சதத்தினைப் பெறுவதற்கு தான் கடுமையாக உழைத்ததாகவும், மிகவும் திருப்தியான ஒரு சதமாக இது அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Saturday, December 17, 2011

இந்தியா - அவுஸ்திரேலியா பயிற்சி போட்டி சமன்

இந்திய அணியின் சச்சின், லட்சுமண், ரோகித் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி போட்டி சமனானது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 26ம் திகதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இதற்கு தயாராகும் விதத்தில் கிரிக்கட் அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடியது. கான்பெராவில் நடந்த இப்போட்டியின் முதல் நாளில், அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 398 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
நேற்று இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ரகானே(3) ஏமாற்றம் தந்தார். காம்பிர் 35 ஓட்டங்கள் எடுத்தார். அணித்தலைவர் டிராவிட்(45) அரைசத வாய்ப்பை இழந்தார்.
பின் இணைந்த சச்சின், லட்சுமண் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 92 ஓட்டங்கள் எடுத்த சச்சின், அரைசதம் கடந்த லட்சுமண்(57) இருவரும், மற்ற துடுப்பாட்டவீரர்களுக்கு வழிவிட்டு “ரிட்டையர்டு ஹர்ட்” முறையில் பெவிலியன் திரும்பினர்.
விராத் கோஹ்லி(1) நிலைக்கவில்லை. அடுத்து ரோகித் சர்மா, சகா இருவரும் இணைந்து மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 83.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 320 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் போட்டி சமன் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அரைசதம் கடந்த ரோகித் சர்மா 56 ஓட்டங்களுடனும், சகா 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வலுவான நிலையில் தென் ஆப்ரிக்க அணி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வலுவான முன்னிலை நோக்கி முன்னேறுகிது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி, 180 ஓட்டங்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 1 விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. தென் ஆப்ரிக்க அணியின் அனுபவ வீரர்கள் ஆம்லா(18), காலிஸ்(31) பெரிய அளவில் சோபிக்கவில்லை.
ரூடால்ப் 44 ஓட்டங்கள் எடுத்திருந்த போது திசாரா வேகத்தில் வீழ்ந்தார். பின் டிவிலியர்ஸ், பிரின்ஸ் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை சரிவில் இருந்து மீட்டது.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு முன்பு தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 257 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டிவிலியர்ஸ் 56 ஓட்டங்களுடனும், பிரின்ஸ் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Friday, December 16, 2011

தென்னாபிரிக்க அபார பந்துவீச்சில் 180 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை

தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது ரெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி சகல விக்கெட்களையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் பரணவித்தாரன 32 ஓட்டங்களையும் மஹீல ஜயவர்த்தன 30 ஓட்டங்களையும் சமரவீர 36 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 38 ஓட்டங்களையும் பெற ரங்கண ஹேரத் ஆட்டமிழக்காது 14 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் தில்ஷான், சங்கக்கார உள்ளிட்ட 6 வீரர்கள் ஒற்றை இழக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க சார்பில் பிலன்டர் 5 விக்கெட்களையும் ஸ்டெயின் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அவுஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் காயம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26ம் திகதி தொடங்க உள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணியில் உள்ள முன்னணி வீரர்கள் பலர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே காயம் காரணமாக தொடக்க வீரர் மார்ஷ் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
இளம் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரடி வீரர்களான வார்னர், வாட்சன் மற்றும் வேகப் பந்து வீச்சாளரான பீட்டர் சிடில், பேட்டின்சன் ஆகியோரும் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி வீரர்கள் பலர் உடல்தகுதியுடன் இல்லாததால் 20-20 போட்டிக்கு வீரர்களை தெரிவு செய்யும் நிலைக்கு அவுஸ்திரேலிய  தெரிவு குழுவினர் தள்ளப்பட்டுள்ளனர்.

பயிற்சி ஆட்டம்: கிரிக்கட் அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணி அசத்தல்

முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அளித்தனர். ராபின்சன், கூப்பர் சதம் அடிக்க முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணி 398 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 26ம் திகதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.
இதற்கு முன் இந்தியா, கிரிக்கட் அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணிகள் மோதும் முதலாவது பயிற்சி போட்டி(இரண்டு நாள்) கான்பெராவில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் தோனி, சேவாக், ஜாகிர், அஷ்வின் விளையாடவில்லை. அணித்தலைவர் பொறுப்பை டிராவிட் ஏற்றார். நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற டிராவிட் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
கிரிக்கட் அவுஸ்திரேலியா சேர்மன் லெவன் அணியின் அணித்தலைவர் ரேயான் பிராட்(8), உமேஷ் யாதவ் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய ஜோயி பர்ன்ஸ் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பிரக்யான் ஓஜா சுழலில் சிக்கினார். பின் இணைந்த வெஸ் ராபின்சன், டாம் கூப்பர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்திய பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள் சதம் அடித்து அசத்தினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் எடுத்த போது ஓஜா பந்தில் ராபின்சன்(143) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அலெக்ஸ் டோலனுடன் இணைந்த கூப்பர், அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்தார். வேகத்தில் அசத்திய உமேஷ் யாதவ், டோலன்(29), கிளீன் மேக்ஸ்வல்(0) ஆகியோரை ஒரே ஓவரில் வெளியேறினர். வினய் குமாரிடம் சரணடைந்த டீன் சால்வே(5) சோபிக்கவில்லை.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் கிரிக்கட் ஆஸ்திரேலியா சேர்மன் லெவன் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 398 ஓட்டங்கள் எடுத்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்: டிராவிட்

இந்திய - அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26ந் திகதி மெல்போர்னில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி தற்போது அவுஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் டிராவிட் கூறுகையில், நான் நல்ல பார்மில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் பார்மில் இருந்தால் மட்டும் ஓட்டங்களை குவித்துவிட முடியாது.
அவுஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன். அவுஸ்திரேலிய தொடரை வெல்ல வேண்டும் என்றால் அணியில் குறைந்தது 8 வீரர்களாவது சிறப்பாக ஆட வேண்டும்.
தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே கிண்ணத்தை வெல்ல முடியும் என்றார்.

Thursday, December 15, 2011

டெஸ்ட் தரவரிசையில் 6 வருடங்களின் பின் இலங்கைக்கு கடும் பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணி கடந்த 6 வருட காலத்தில் முதல் தடவையாக 100 தரவரிசைப் புள்ளிகளுக்கு (Rationg Points) கீழே சென்றுள்ளது.
ஐ.சி.சியின் புதிய தரவரிசைப் பட்டியலின்படி, திலகரட்ன தில்ஷான தலைமையிலான இலங்கை அணி 99 தரப்படுத்தல் புள்ளிகளைப் பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது.
இலங்கை அணி இதற்குமுன் டெஸ்ட் தரப்படுத்தலில் 100 தரவரிசைப் புள்ளிகளைவிட குறைவாக பெற்றிருந்தது 2006 ஜுலை மாதத்திலாகும். சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததையடுத்து இலங்கை அணிக்கு அப்பின்னடைவு ஏற்பட்டது.
அதன்பின்,  காயமடைந்த மாவன் அத்தபத்துவிடமிருந்து மஹேல ஜயவர்தன தலைமைப் பதவியை  பொறுப்பேற்றுக் கொண்டபின், இலங்கை அணியின் தரப்படுத்தல் புள்ளிகள் அதிகரித்தன. 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் அணிகளுக்கிடையிலான தரப்படுத்தல் புள்ளிகளுடன் 120 தரவரிசைப் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.
அதன்பின் ஐ.சி.சி. டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை அணி ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருந்தாலும் 100 இற்கு மேற்பட்ட தரவரிசைப் புள்ளிகளைக் கொண்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்கா தற்போது 116 தரவரிசைப் புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் இங்கிலாந்து அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும்; இந்தியா 118 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. அவுஸ்திரேலியா 103 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 98 புள்ளிகளுடன் 6 ஆம்இடத்தில் உள்ளது. மேற்கிந்திய அணி 7 ஆம் இடத்திலும் நியூஸிலாந்து 8 ஆவது இடத்திலும் பங்களாதேஸ் 9 ஆவது இடத்திலும் உள்ளன.

அதிக ஒருநாள் போட்டிகள்: ஐ.சி.சி. மீது டிராவிட் பாய்ச்சல்

அர்த்தமற்ற வகையில் அதிகளவில் ஒருநாள் போட்டிகளை நடத்துவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) குறைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அதிக ஒருநாள் போட்டிகளுக்குப் பதிலாக முக்கிய 50 ஓவர் போட்டிகள், உலகக் கோப்பை மற்றும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதில் ஐசிசி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள அவர், கிரிக்இன்போவுக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:
1985-ம் ஆண்டில் இருந்தே அதிக அளவில் ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுவதை அர்த்தமற்றது என்று மக்கள் கூறி வருகிறார்கள். அதை குறைப்பதற்கான சரியான தருணம் இதுவாக இருக்கலாம். கடந்த அக்டோபரில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடரின்போது மைதானங்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதற்கு முன் மைதானம் இதுபோன்று காலியாக இருந்ததில்லை. இந்தியா-இங்கிலாந்து தொடர் விறுவிறுப்பில்லாமல் போனதற்கு அந்தத் தொடர் நடைபெற்ற சில வாரங்களுக்கு முன்பு இவ்விரு அணிகளும் 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியதே காரணம்.
அதன்பிறகு நடைபெற்ற இந்திய-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் மைதானங்கள் நிரம்பி வழிந்தன. இந்தப்போட்டிகள் நடைபெற்ற மைதானங்கள் சிறியவை. இங்கு பெரிய அளவில் சர்வதேச அளவிலான போட்டிகள் நடைபெற்றதில்லை. ரசிகர் கூட்டம் குறைந்தது ஒருநாள் போட்டிக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம் என்றார். இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாதுகாக்கப்பட வேண்டும். பகல்-இரவு டெஸ்ட் போட்டி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் முடிவு கைவிடப்படும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச்சில் அபுதாபியில் பகலிரவு முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடினேன். அந்த அனுபவத்திலிருந்தே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்று கூறுகிறேன்.
சில இடங்களில் பனிக் காரணமாக பகலிரவு போட்டியை நடத்துவது சவாலாக இருக்கலாம். அதுபோன்ற இடங்களில் சிவப்பு நிற பந்துகளைப் பயன்படுத்தும்போது பந்து கண்ணுக்கு எளிதாகத் தெரியும் என்றார். கிரிக்கெட் பிதாமகர் என்றழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று திராவிட் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் வெளிநாட்டு வீரர் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, December 14, 2011

யுவராஜ், இந்திய அணியின் ரஜினிகாந்த்: டோனி புகழாரம்

நடிகர் ரஜினிகாந்தையும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், யுவராஜ் இருவரும் டிசெம்பர் 12 ஆம் திகதி பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போட்டிகளை வெல்லுவதில் யுவராஜ்சிங் விசேட ஆற்றல் கொண்டவர் எனத் தெரிவித்துள்ள டோனி, 'யுவராஜ்தான் எமது ரஜினிகாந்த்' எனவும் கூறியுள்ளார்.
'துடுப்பினால் மாத்திரமல்லாமல் பந்தினாலும் சிறப்பான ஆற்றலை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இருபது20 போட்டிகளிலும் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியதுடன் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இருவரும் ஒரே மாதிரியானவர்கள். தென்னிந்தியாவில் ரஜினி சேர் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். இருவருக்கும் மிக மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என டோனி கூறியுள்ளார்.
இந்திய அணியின் துடுப்பாட்ட நட்சத்திரங்களான வீரேந்தர் ஷேவாக், கௌதம் காம்பீர் ஆகியோரையும் டோனி வெகுவாக பாராட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுலாவின் பெறுபேறு எப்படி அமையும் எனக் கேட்டபோது,
'அதை என்னால் எதிர்வு கூறுவது கடினம். முதல் 12-15 நாட்களில் நாம் எப்படி தயார்படுத்திக்கொள்கிறோம். சூழ்நிலைக்கு எப்படி பழகிக்கொள்கிறோம் என்பதில் அது தங்கியுள்ளது. பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் அங்கு ஏற்கெனவே விளையாடியுள்ளனர். இது அவர்களின் முதல் அவுஸ்திரேலிய சுற்றுலா அல்ல. அங்கு நாம் சிறப்பாக விளையாடுவோமென எதிர்பார்க்கின்றோம்' என டோனி தெரிவித்துள்ளார்.

அணியில் இருந்து பொன்டிங் அல்லது மைக் ஹஸியை விலக்க நேரிடும் : அலன் போர்டர்

இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியிலிருந்து ரிக்கி பொன்டிங் அல்லது மைக்கல் ஹஸியை நீக்கவேண்டிய நிலைக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்  குழுவினர் தள்ளப்படுவர் என அவ்வணியின் முன்னாள் தலைவர் அலன்போர்டர் கூறியுள்ளார்.
நியூஸிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இவ்விரு வீரர்களும் பிரகாசிக்கத் தவறியமையே இதற்கான காரணமாகும்.
'வயதான வீரர்களில் ஒருவர் வெளியேறுவார் என நான் எண்ணுகிறேன். ஹஸி அல்லது பொன்டிங் வெளியேறக்கூடும்' என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய அலன் போர்டர் கூறினார்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொன்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமொன்றைக் குவித்து ஏறத்தாழ இரு வருடங்களாகின்றன. அண்மைக்காலமாக அவர் பிரகாசிக்கத் தவறி வருகிறார். எனவே அவராகவே ஓய்வு பெறாவிட்டால் தேர்வாளர்கள் பெரும் நெருக்கடியை  எதிர்நோக்க நேரிடும் என முன்னாள் வீரர்கள் பலர் கருதுகின்றனர்.
'பொன்டிங் இவ்விளையாட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவுஸ்திரேலிய அணியின் அற்புதமான வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இப்போது அவர் பிரகாசிக்கவில்லை.  எனவே ஒவ்வொருவரும் அதைப்பற்றி பேசுகிறார்கள். அவர் தொடர்ந்து விளையாடத் தீர்மானித்தால்  மோசமான சூழ்நிலையொன்று ஏற்படும்' என முன்னாள் சுழற்பந்துவீச்சு நட்சத்திரமான ஷேன் வோர்ன் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் எனது முழுதிறமையை வெளிப்படுத்துவேன்: ரோஹித் சர்மா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். இதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டியிலும் இடம்பெற ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்கு நான் கடுமையான பயிற்சி மூலம் தயாராக இருந்தேன்.
அதனால் தான் சிறப்பாக ஆடி இருக்கிறேன். நான் எப்போது போட்டியில் ஆடினாலும் 100 சதவிகித திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பேன்.
இந்த போட்டியில் ஓரளவு திறமையாக ஆடினேன். எனக்கு டெஸ்ட் போட்டியிலும் ஆட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது. அந்த கனவு நனவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.
இதற்காக எல்லா முயற்சிகளையும் செய்வேன். தற்போது எனக்கு 25 வயது ஆகிவிட்டது. டெஸ்ட் போட்டிக்கு செல்வதற்கு இதுதான் சரியான வயது என்று கருதுகிறேன். டெஸ்ட் போட்டியில் ஆடுவது என்பது மிகவும் பொறுப்பான செயல்.
இனிவரும் போட்டிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்தி விளையாடி நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நான் கைவிட மாட்டேன். எனது முன்னேற்றத்திற்கு ரஞ்சி கோப்பை போட்டி மிகவும் உதவியாக இருந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் சில தவறுகளை செய்தேன். அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டுள்ளேன். இந்த ஆட்டம் என்னை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. அவுஸ்திரேலியா போட்டியிலும் இதை போல சிறப்பாக ஆடுவேன் என எதிர்பார்க்கிறேன்.

ஹர்பஜனின் முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டது

கடவுச்சீட்டு, கடனட்டை, ஓட்டுநர் உரிமம் உட்பட பல விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய ஹர்பஜன் சிங்கின் திருடப்பட்ட பல முக்கிய ஆவணங்கள் இந்தியாவின் அரியானா மாநில காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
நேற்று முன்தினம்(12.12.2011) இந்திய கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் தனது நண்பருடன் டெல்லி வந்தார். இவர் கர்னால் அருகில் உள்ள மதுபான் என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார்.
அப்போது அங்குவந்த மர்ம கும்பல் ஹர்பஜன் காரின் கண்ணாடியை உடைத்து கடவுச்சீட்டு, பணம், ஓட்டுநர் உரிமம், கடனட்டை உட்பட பல விலை மதிப்பு மிக்க முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர். இத்திருட்டு குறித்து கர்னால் காவல்துறையினரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் நேற்று கர்னாலில் உள்ள செக்டர் 13 என்ற இடத்தில் இந்த முக்கிய ஆவணங்களை கண்டுபிடித்தனர்.
இதில் 5 கடனட்டை மற்றும் அவரது உறவினரின் ஒரு கிரீன் கார்டு ஆகியவை இருந்தன. ஆனால் ரூ. 9,500 பணம்(இந்திய ரூபாய்), கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இல்லை.
காணமல் போன எஞ்சிய பொருட்கள் மற்றும் திருட்டு கும்பலை கண்டுபிடிக்க ஐந்து குழுவாக காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் இவர்கள் பிடிபடுவார்கள் என கர்னால் காவல்துறை உயரதிகாரி ஜோகிந்தர் ராதி தெரிவித்துள்ளார்.

மோசமான தோல்வியடைந்த அவுஸ்திரேலியா: நியூசிலாந்து ரசிகர்கள் கொண்டாட்டம்

ஹோபர்ட் டெஸ்டில் பெற்ற வரலாற்று வெற்றியை நியூசிலாந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அவுஸ்திரேலிய சென்ற நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
ஹோபர்ட்டில் நடந்த இரண்டாவது டெஸ்டில், டக் பிரேஸ்வெல் வேகத்தில் அவுஸ்திரேலியா சரணடைய, நியூசிலாந்து 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 26 ஆண்டுகளுக்குப் பின் அவுஸ்திரேலிய மண்ணில் வெற்றியை பதிவு செய்தது. இதுதவிர தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இவ்வெற்றி குறித்து நியூசிலாந்து அணித்தலைவர் ராஸ் டெய்லர் கூறுகையில், நியூசிலாந்து மக்களுக்கு முன்னதாக கிறிஸ்துமஸ் பரிசு அளித்துள்ளோம். கிரிக்கட் வரலாற்றிலேயே இவ்வெற்றி மறக்க முடியாத ஒன்றாக நிலைத்திருக்கும் என்றார். இதே வாசகத்தையே நியூசிலாந்து பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன.
ஹோபர்ட் டெஸ்டின் போக்கையே மாற்றியவர் பிரேஸ்வெல். இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் வீரர் இயான் பிரைன் தனது டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியில், சதம் அடித்த வார்னர் தோல்வியடைந்த அணியில் உள்ளார். 6 விக்கெட் வீழ்த்திய பிரேஸ்வெல் வெற்றி பெற்ற அணியில் இருக்கும் போது அவருக்கு தான் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இத்தோல்வி அவுஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பொண்டிங், மைக்கேல் ஹசி போன்ற மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆலன் பார்டர் கூறுகையில், பொண்டிங், மைக்கேல் ஹசி ஆகியோர் மோசமான பார்மில் உள்ளனர். இவர்களில் யாராவது ஒருவரை நீக்க வேண்டும் என்றார்.

சேவாக்கின் அதிரடி தொடருமா? : இன்று சென்னையில் மோதும் இந்தியா - மேற்கிந்திய தீவுகள்

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றுவிட்டபோதும், கடைசி ஆட்டத்தையும் வென்று அவுஸ்திரேலியத் தொடருக்கு உற்சாகமாகச் செல்லும் எண்ணத்தோடு களமிறங்குகிறது. அதேநேரத்தில் தொடரை இழந்து விட்டாலும், கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற்று நாடு திரும்ப மேற்கிந்தியத் தீவுகள் முயற்சிக்கும்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் இந்தூர் ஆட்டத்தைப் போலவே சேவாக்கின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின், தோனி, யுவராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
ரோஹித் சர்மாவின் ரன் குவிப்பு இந்த ஆட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலி, கம்பீரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் 55 ரன்கள் குவித்து மீண்டும் பார்முக்கு திரும்பிய ரெய்னா, இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடலாம். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அவர், சேப்பாக்கம் மைதானத்தில் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். இது அவருக்கு கூடுதல் பலம். பின்வரிசையில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆட்டத்தில் வாய்ப்பளிக்கப்படாத இர்ஃபான் பதானுக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ரஞ்சி போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு அழைக்கப்பட்ட அவரை சோதனை முயற்சியாக தேர்வுக்குழுவினர் இந்த ஆட்டத்தில் களமிறக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கடந்த 4 ஆட்டங்களில் இதுவரை பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதால் சிறப்பாக பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அறிமுக ஆட்டத்தில் விளையாடிய ராகுல் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியாவிடம் இழந்தாலும், ஆமதாபாத் போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்காவிட்டாலும், சராசரியாக 25 ரன்கள் எடுத்துள்ளனர். இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கக்கூடும். தொடரை இழந்துவிட்டாலும் வெற்றிபெறும் முனைப்போடு அவர்கள் கடைசி ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அந்த அணியின் கேப்டன் சமி, "எங்கள் அணி வீரர்கள் சென்னை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். எங்களால் இந்த ஆட்டத்தில் வெல்ல முடியும் என்று நினைக்கிறோம். வெற்றிபெறும் முனைப்போடு நாளைய ஆட்டத்தை எதிர்கொள்வோம்' என்று கூறியுள்ளார்.

135 ஓட்டங்களில் சுருண்டது வங்கதேசம்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 51.2 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணியில் அதிகபட்சமாக நசிர் ஹுûஸன் 41 ஓட்டங்களும், நிஜிமுதீன் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்ததால் அந்த அணி 135 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல், அப்துர் ரெஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், உமர் குல், சீமா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் -132/0: பின்னர் ஆடிய பாகிஸ்தான் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 38 ஓவர்களில் தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 132 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹபீஸ் 74, தெளபிக் உமர் 53 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர். வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட பாகிஸ்தான் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது.

சேவாக்கின் அதிரடியில் நிகழ்ந்த உலக சாதனைகள்

* கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் இரண்டு முச்சதம், ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த ஒரே வீரர் வீரேந்திர சேவாக்.
* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 140 பந்துகளில் இரட்டைச் சதமடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிகவேக இரட்டைச் சதமடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். ஒருநாள் போட்டியில் சச்சின், சேவாக் ஆகியோர் மட்டுமே இரட்டைச் சதமடித்துள்ளனர். சச்சின் 147 பந்துகளில் இரட்டைச் சதமடித்தார்.
* சச்சின், சேவாக் இருவருமே மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில்தான் இரட்டைச் சதமடித்துள்ளனர். சச்சின் குவாலியரிலும், சேவாக் இந்தூரிலும் இரட்டைச் சதம் கண்டனர்.
* சேவாக்-கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சேவாக் -கங்குலி ஜோடி குவித்த அதிகபட்ச ரன்னான 176 ரன்கள் சமன் செய்யப்பட்டது. 2002-ல் ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் சேவாக்-கங்குலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்தது.
* ஒருநாள் போட்டியில் சேவாக் முதல்முறையாக 7 சிக்ஸர்கள் அடித்தார்.
* அதிக சதமடித்த இந்திய வீரர்களில் 15 சதங்களுடன் சேவாக் 3-வது இடத்தில் உள்ளார். சச்சின் (48) முதலிடத்திலும், கங்குலி (22) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
* சேவாக் சதமடித்த ஆட்டங்களில் 14-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2-வது முறையாகவும், ஒருநாள் போட்டியில் 23-வது முறையாகவும் ஆட்டநாயகன் விருதை வென்றார் சேவாக்.
* இந்த ஆண்டில் மட்டும் 12 இன்னிங்ஸ்களில் 2 சதம், ஒரு அரைசதத்துடன் 645 ரன்கள் குவித்துள்ளார் சேவாக்.
* இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர், 25 பவுண்டரிகள் மூலம் 142 ரன்கள் குவித்து சிக்ஸர், பவுண்டரிகள் மூலம் அதிக ரன் எடுத்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் சேவாக். ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 15 சிக்ஸர், 15 பவுண்டரிகள் மூலம் 150 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். வாட்சன் வங்கதேசத்துக்கு எதிராக 96 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 185 ரன்கள் எடுத்தபோது இந்த சாதனையை செய்தார்.
* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 69 பந்துகளில் சதமடித்தார் சேவாக். இதுதான் இந்திய வீரர் ஒருவர் அந்த அணிக்கு எதிராக அடித்த அதிவேக சதம். இதற்கு முன் அந்த அணிக்கு எதிராக சேவாக் 75 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.
* இந்த ஆட்டத்தில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது. அந்த அணிக்கு எதிராக இந்தியா பெற்ற இரண்டாவது பெரிய வெற்றி. இதற்கு முன் 2007 ஜனவரியில் வடோதராவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதே அதிகபட்ச ரன் வித்தியாசத்திலான வெற்றி.
* 4-வது முறையாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ளது இந்தியா. இதற்கு முன் 2006-07-ல் 3-1, 2009-ல் 2-1, 2011-ல் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா 45 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 57 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது. இரண்டு ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.
* ஒருநாள் போட்டியில் 4 முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே அணி இந்தியாதான். இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பெர்முடா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா இந்த சாதனையை செய்துள்ளது.
* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா குவித்த 418 ரன்கள், ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட 4-வது அதிகபட்ச ஸ்கோர். நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை குவித்த 443 ரன்களே ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.
* இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 34 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சைப் பதிவு செய்ததோடு, 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இது அவருக்கு 47-வது போட்டியாகும்.
* கம்பீர் (67 ரன்கள்) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2-வது அரைசதத்தையும், ஒருநாள் போட்டியில் 28-வது அரைசதத்தையும் பதிவு செய்தார்.