Tuesday, December 20, 2011

சக வீரர் ரோஹித்துடன் எனக்கு போட்டி இல்லை : விராட் கோலி

ரோஹித் சர்மாவை எனது போட்டியாளராகக் கருதவில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடனான ஆட்டத்தில் இருவரும் இணைந்து 78 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எதிர்காலத்தில் இருவருமே இணைந்து இந்திய அணிக்காக விளையாட உள்ளோம். எனது போட்டியாளராக ரோஹித்தை கருதவில்லை.
என்னிடம் எப்போதுமே இதே கேள்வியைக் கேட்கின்றனர். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்க எப்போதுமே 2-3 பேர் காத்திருக்கின்றனர். நாங்கள் இருவருமே இணைந்து சிறப்பாக விளையாடி உள்ளோம். இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது. போட்டி இருந்தாலும் அது ஆரோக்கியமானதாகவே உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் 6-வது வீரராக இறங்குவதற்கு பதில் 4-வது வீரராக களம் இறங்கியது பயனுள்ளதாக இருந்தது.
விரைவிலேயே சில விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், 4-வது வீரராக களம் இறங்கி புதிய பந்தை எதிர்கொண்டது சிறப்பான பயிற்சியாக அமைந்தது. சில ஓவர்கள் வீசப்பட்டுவிட்டால், பந்து ஓரளவு பழையதாகிவிடும். அதன் பின்னர் ரன் சேர்ப்பது ஓரளவு எளிதாகும். அதனால்தான் வலைப்பயிற்சியில்கூட புதிய பந்தையே அதிகம் பயன்படுத்துகிறோம். ஜாகீர் கான், உமேஷ் யாதவ், வினய் குமார், அபிமன்யூ மிதுன், இஷாந்த் சர்மா ஆகியோர் வேகமாகவும், துல்லியமாகவும் பந்துவீசக் கூடியவர்கள். எனவே, அவர்களது பந்துவீச்சில் ரன் குவிப்பது அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சவாலானதாகவே இருக்கும்.
அவுஸ்திரேலிய அணியில் இப்போது பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒருகாலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அனுபவ வீரர்களின் திறமையுடன் புதிய வீரர்களின் திறமையை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. இளம் வீரர்கள் பிரகாசிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படும். இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடுவது என்பது அவுஸ்திரேலிய வீரர்களின் மனப்பான்மை. அந்த மனப்பான்மை புதிய வீரர்களிடமும் இருக்கும். அதனால், அவுஸ்திரேலியாவுடனான தொடர் பரபரப்பானதாகவே இருக்கும். அவுஸ்திரேலிய அணியில் இப்போதுள்ள இடம்பெற்றுள்ள வீரர்களும் ஆட்டத்தின் போக்கை மாற்ற வல்லவர்கள்தான். எனவே, புதிய வீரர்கள் என்பதால் அவர்களை குறைவாக மதிப்பிடமாட்டோம் என்றார் கோலி.

No comments:

Post a Comment