Wednesday, December 14, 2011

மோசமான தோல்வியடைந்த அவுஸ்திரேலியா: நியூசிலாந்து ரசிகர்கள் கொண்டாட்டம்

ஹோபர்ட் டெஸ்டில் பெற்ற வரலாற்று வெற்றியை நியூசிலாந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அவுஸ்திரேலிய சென்ற நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
ஹோபர்ட்டில் நடந்த இரண்டாவது டெஸ்டில், டக் பிரேஸ்வெல் வேகத்தில் அவுஸ்திரேலியா சரணடைய, நியூசிலாந்து 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 26 ஆண்டுகளுக்குப் பின் அவுஸ்திரேலிய மண்ணில் வெற்றியை பதிவு செய்தது. இதுதவிர தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இவ்வெற்றி குறித்து நியூசிலாந்து அணித்தலைவர் ராஸ் டெய்லர் கூறுகையில், நியூசிலாந்து மக்களுக்கு முன்னதாக கிறிஸ்துமஸ் பரிசு அளித்துள்ளோம். கிரிக்கட் வரலாற்றிலேயே இவ்வெற்றி மறக்க முடியாத ஒன்றாக நிலைத்திருக்கும் என்றார். இதே வாசகத்தையே நியூசிலாந்து பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன.
ஹோபர்ட் டெஸ்டின் போக்கையே மாற்றியவர் பிரேஸ்வெல். இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் வீரர் இயான் பிரைன் தனது டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியில், சதம் அடித்த வார்னர் தோல்வியடைந்த அணியில் உள்ளார். 6 விக்கெட் வீழ்த்திய பிரேஸ்வெல் வெற்றி பெற்ற அணியில் இருக்கும் போது அவருக்கு தான் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இத்தோல்வி அவுஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பொண்டிங், மைக்கேல் ஹசி போன்ற மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆலன் பார்டர் கூறுகையில், பொண்டிங், மைக்கேல் ஹசி ஆகியோர் மோசமான பார்மில் உள்ளனர். இவர்களில் யாராவது ஒருவரை நீக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment