Thursday, December 15, 2011

டெஸ்ட் தரவரிசையில் 6 வருடங்களின் பின் இலங்கைக்கு கடும் பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணி கடந்த 6 வருட காலத்தில் முதல் தடவையாக 100 தரவரிசைப் புள்ளிகளுக்கு (Rationg Points) கீழே சென்றுள்ளது.
ஐ.சி.சியின் புதிய தரவரிசைப் பட்டியலின்படி, திலகரட்ன தில்ஷான தலைமையிலான இலங்கை அணி 99 தரப்படுத்தல் புள்ளிகளைப் பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது.
இலங்கை அணி இதற்குமுன் டெஸ்ட் தரப்படுத்தலில் 100 தரவரிசைப் புள்ளிகளைவிட குறைவாக பெற்றிருந்தது 2006 ஜுலை மாதத்திலாகும். சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததையடுத்து இலங்கை அணிக்கு அப்பின்னடைவு ஏற்பட்டது.
அதன்பின்,  காயமடைந்த மாவன் அத்தபத்துவிடமிருந்து மஹேல ஜயவர்தன தலைமைப் பதவியை  பொறுப்பேற்றுக் கொண்டபின், இலங்கை அணியின் தரப்படுத்தல் புள்ளிகள் அதிகரித்தன. 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் அணிகளுக்கிடையிலான தரப்படுத்தல் புள்ளிகளுடன் 120 தரவரிசைப் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.
அதன்பின் ஐ.சி.சி. டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை அணி ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருந்தாலும் 100 இற்கு மேற்பட்ட தரவரிசைப் புள்ளிகளைக் கொண்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்கா தற்போது 116 தரவரிசைப் புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் இங்கிலாந்து அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும்; இந்தியா 118 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. அவுஸ்திரேலியா 103 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 98 புள்ளிகளுடன் 6 ஆம்இடத்தில் உள்ளது. மேற்கிந்திய அணி 7 ஆம் இடத்திலும் நியூஸிலாந்து 8 ஆவது இடத்திலும் பங்களாதேஸ் 9 ஆவது இடத்திலும் உள்ளன.

No comments:

Post a Comment