Friday, March 9, 2012

இளைஞர்களுக்கு வழி விடவே ஓய்வு பெறுகிறேன்: ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கட் அணியில் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அவர்களுக்கு வழிவிட்டு, கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், விக்கெட் கீப்பரும் ஆன ராகுல் டிராவிட் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனது ஓய்வை அறிவித்து பேசினார்.
சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிறது. எனவே, தற்போது அதிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என எண்ணுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இத்தனை வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது எனது ஓய்வின் மூலம் இளைய வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க உதவிகரமாக அமையும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் என்னை வழிநடத்திய பயிற்சியாளர்களுக்கும், என்னை தெரிவு செய்தவர்களுக்கும், நான் விளையாடிய அணிக்கும், எனது அணித்தலைவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
இறுதியாக என்னுடைய ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஒய்வு எனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிட வழி செய்யும் என்று கூறினார். கூட்டத்தில் பேசிய பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன், ராகுல் டிராவிடின் சாதனைகளையும் ஒத்துழைப்பினையும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
1996 ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் அறிமுகமான டிராவிட், இந்திய அணிக்கு 2 ஆண்டுகள் அணித்தலைவர் பதவி வகித்துள்ளார். இதுவரை 13,288 டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்து இந்திய கிரிக்கட் வீரர்களில் அதிக டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்துள்ள இரண்டாவது வீரராக ராகுல் டிராவிட் திகழ்கிறார்.
தனது 16 ஆண்டுகால கிரிக்கட் வரலாற்றில், 12 ஒரு நாள் சதத்தையும், 36 டெஸ்ட் சதத்தையும் எடுத்துள்ளார் ராகுல் டிராவிட். மேலும், கிரிக்கட் வீரர்களிலேயே யாரும் இதுவரை சாதிக்காத அளவிற்கு சுமார் 120 கேட்ச் பிடித்துள்ள ஒரே வீரர் ராகுல் டிராவிட்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிண்ணப் போட்டியை பழிதீர்க்கும் போட்டியாக நினைக்க மாட்டோம்: மிஸ்பா உல் ஹக்

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியை பழிதீர்க்கும் போட்டியாக நினைக்க மாட்டோம் என பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் வரும் 11ம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி, அந்நாட்டின் கராச்சி நகரில் இருந்து புதன்கிழமை இரவு விமானம் மூலம் புறப்பட்டது.
அந்நேரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது மிஸ்பா கூறியதாவது, கடந்த உலக கிண்ண அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி கண்டதால் அதற்கான பழிவாங்கும் போட்டியாக ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியாவுடனான போட்டியை பார்க்க மாட்டோம்.
அப்படி நினைத்தால் அது எங்களுக்கு நெருக்கடியைத் தான் ஏற்படுத்தும். இந்தியாவுடன் விளையாடும் போது எவ்வித நெருக்கடியையும் எங்களுக்கு நாங்களே ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
இந்தப் போட்டியில் வங்கதேசம் உட்பட எந்த அணிகளையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். சொந்த மண்ணில் விளையாடுவதால் வங்கதேசம் சிறப்பாக ஆடும்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுதோல்வி கண்டதை பாகிஸ்தான் வீரர்கள் மறந்து விட வேண்டாம். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் செய்த தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆசிய கிண்ணத் தொடரைப் பொறுத்த வரையில் இந்தியா, இலங்கை உட்பட அணிகள் பலம் வாய்ந்தவை. அவை நல்ல நிலையில் உள்ளன என்றார்.

ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து அவுஸ்திரேலியா முதலிடம்

சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இருப்பினும் அவுஸ்திரேலிய அணி முத்தரப்புத் தொடரில் 11 ஆட்டங்களில் 5-ல் தோல்வி கண்டதால், 3 ரேட்டிங் புள்ளிகளை இழந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியைவிட 9 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது அவுஸ்திரேலியா. ஏப்ரல் 1ம் திகதி வரை அவுஸ்திரேலியா அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் பட்சத்தில் சிறந்த ஒருநாள் அணிக்கான ஐ.சி.சி.யின் பரிசுத் தொகையை தொடர்ந்து 3-வது ஆண்டாக பெற்று விடும்.
அடுத்து அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அதில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்தால் மட்டுமே அவுஸ்திரேலிய அணிக்கு தரவரிசையில் சறுக்கல் ஏற்படும்.
2-வது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியோ, 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணியைவிட ஒரு புள்ளியே அதிகமாகப் பெற்றுள்ளது. இலங்கை அணி 4-வது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து- தென் ஆப்ரிக்கா டெஸ்ட்: முன்னிலையில் நியூசிலாந்து

டுனிடினில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் டுனிடினில் நடக்கிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 191 ஓட்டங்கள் எடுத்தது. ருடால்ப் 46 ஓட்டங்களுடனும், பிலாண்டர் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. பிலாண்டர் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ருடால்ப் அரைசதம்(52) அடித்து வெளியேறினார். இம்ரான் தாகிர் 11வது ஓட்டம் எடுக்க முற்படுகையில் ஆட்டமிழந்ததால், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்தின் மார்டின் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின் முதல் இன்னிங்க்சை தொடக்கிய நியூசிலாந்து அணிக்கு நிக்கோல் 6 ஓட்டங்களிலும், கப்டில் 16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
மெக்கலம், ராஸ் டெய்லர் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை கொடுத்தனர். இருப்பினும் ராஸ் டெய்லர்(44) அரைசத வாய்ப்பிழந்து திரும்பினார். வில்லியம்சன்(11) நீடிக்கவில்லை. மெக்கலம்(48), வெட்டோரி(46) அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
வான்விக்(36), பிரேஸ்வெல்(25) சற்று ஆறுதல் தந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் பிலேந்தர் 4, மார்கல் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இன்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கி தென் ஆப்ரிக்கா துடுப்பெடுத்தாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி தென் ஆப்ரிக்க அணி 143 ஓட்டங்கள் எடுத்த நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

Saturday, March 3, 2012

அவுஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதும் முதல் இறுதிப்போட்டி நாளை ஆரம்பம்

சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரில் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 ஓட்டங்களில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இலங்கை அணி வெற்றி பெற்றதால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
லீக் முடிவில் இலங்கை, அவுஸ்திரேலியா இரு அணிகளும் தலா 19 புள்ளிகளை பெற்று உள்ளது. லீக் ஆட்டங்களில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை அதிக முறை வீழ்த்தியுள்ளதால் முதல் இடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்த இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி 15 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து வெளியேறியது.
இதனையடுத்து அவுஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் இறுதி போட்டி 3 ஆட்டங்களாக நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒரே அணி முதல் 2 இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்றால் 3 வது இறுதிப்போட்டி நடைபெறாது.
முதல் இறுதிப்போட்டி பிரிஸ்டேனில் நாளை நடைபெற உள்ளது. இதுவரை அவுஸ்திரேலியா அணி லீக் ஆட்டங்களில் இலங்கையிடம் 3 முறை தோற்றுள்ளது. இதற்கு அவுஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக கடந்த லீக் ஆட்டங்களில் விளையாடாமல் இருந்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் நாளை நடைபெற உள்ள முதல் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீட்டர் பாரஸ்ட் நீக்கப்படுவார். அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் பலவீனமாகவே உள்ளது.
டேவிட் ஹஸ்சி ஒருவரே அனைத்து ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி வருகிறார். டேவிட் வார்னரும், மேத்யூ வடேயும் தான் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள்.
நேற்றைய ஆட்டத்தில் வாட்சன் 3 வது வீரராக வந்து சிறப்பாக விளையாடினார். இதனால் அவர் தொடர்ந்து 3 வது வீரராகவே விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் கிரிக்கட் போட்டி: தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

நியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்ரிக்கா தொடரை வென்றது.
நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவுற்ற நிலையில் 3வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களில் சுருண்டது.
நியூசிலாந்து அணி சார்பில் பிராண்டன் மெக்கல்லம் 47 ஓட்டங்களும், கோலின், பிராங்களின் இருவரும் தலா 36 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹாசிம் ஆம்லா 76 ஓட்டங்களும், பர்னெல் 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கல் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 43.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்ரிக்க அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதற்கு முன்னர் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் தென் ஆப்ரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

Friday, March 2, 2012

இலங்கை அணி அசத்தல் வெற்றி

இன்று நடைபெற்ற இலங்கை- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதுவரை 11 லீக் போட்டிகள் முடிந்து விட்டன. இதில் அவுஸ்திரேலியா 19 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
இந்தியாவும், இலங்கையும் 15 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இந்தியா பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டது.
இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் இலங்கை தோற்றால் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றாலோ, போட்டி சமன் செய்யப்பட்டாலோ அல்லது மழையால் ரத்தானாலோ அது இலங்கைக்கு சாதகமாக அமைந்துவிடும்.
பரபரப்பான இந்த போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயவர்த்தனே, தில்ஷான் களமிறங்கினார்கள். இலங்கை 10 ஓட்டங்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது.
தொடக்க வீரர் ஜெயவர்த்தனே டேவிட் ஹஸ்சி பந்தில் ஓட்டம் எடுக்க முற்படுகையில் ஆட்டமிழந்தார். அவர் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து தில்ஷான் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பேட்டின்சன் பந்தில் வடேயிடம்  பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கையின் ஸ்கோர் 17 ஓட்டங்கள் மட்டுமே
தொடக்கத்தில் இலங்கை அணி தடுமாறினாலும் பின்னர் வந்த சங்ககாரா- சந்திமால் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. ஆட்டத்தின் 25வது ஓவரில் இருவரும் அரை சதத்தை தாண்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
சிறப்பாக ஆடிய சங்ககரா 64 ஓட்டங்களிலும், சண்டிமால் 75 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த திரிமன்னே நிலைத்து ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.
43 ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு அதிர்ச்சி தந்தார் டேனியல் கிறிஸ்டியன். 43 வது ஓவரை வீசிய கிறிஸ்டியன் 43 வது ஓவரின் மூன்றாவது பந்தில் பெரேராவையும், நான்காவது பந்தில் சேனநாயகேவையும், ஐந்தாவது பந்தில் குலசேகராவையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அணியை சரிவிலிருந்து மீட்ட திரிமன்னே 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் கடைசி பந்தில் மலிங்கா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஹெராத் 14 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 50 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் 239 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாட தொடங்கிய. தொடக்க ஆட்டகாரர்களாக வாடே, வார்னரும் களம் இறங்கி விளையாடினர்.
மலிங்கா வீசிய 3- வது ஓவரில் வார்னர் 6 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாட்சன், வாடேவுடன் இணைந்து விளையாடினார். வாடே 9 இருக்கும் போது குலசேகரா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் வந்த பாரஸ்ட் 2 ஓட்டங்களில் பெவுலியன் திரும்பினார். அதை தொடர்ந்து வந்த மைக்கேல் ஹஸ்சி வாட்சனுடன் ஜோடி சேர்ந்து விளையாடினர், இவருவம் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் விளையாடினர்.
வாட்சன் அரை சதம் அடித்தார்.சிறப்பாக விளையாடி வந்த மைக்கேல் ஹஸ்சி 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்போழுது அவுஸ்திரேலியாவின் ஸ்கோர் 134 ஓட்டங்களாக இருந்தது.
பின்னர் களம் வந்த டேவிட் ஹஸ்சி வாட்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். சிறப்பாக விளையாடி வந்த வாட்சன் 65 ஓட்டங்கள் அடித்திருந்த போது மலிங்கா பந்து வீச்சில் போல்டு ஆனார்.
அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற டேவிட் ஹஸ்சி மற்றும் இறுதிவரை போராடினார். கடைசி ஓவருக்கு மட்டும் 10 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.
குலசேகரா வீசிய இறுதி ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்று பவுண்டரி எல்லையில் தில்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டேவிட் ஹஸ்சி. இதனால் இலங்கை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் வெற்றியை அடுத்து இந்திய அணி இறுதி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தகர்ந்தது.

சி.பீ.கிண்ண முத்தரப்பு தொடர்: 239 இலக்குடன் அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகிறது

சி.பீ.கிண்ண முத்தரப்பு தொடரின் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி 239 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு கிரிக்கட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
மெல்போர்னில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது.
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஜெயவர்த்தனே 5 ஓட்டங்களும், தி்ல்சன் 9 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய சங்கக்கரா 64 ஓட்டங்களும், சந்திமால் 75 ஓட்டங்களும், திரிமன்னே 51 ஓட்டங்களும் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
சேனநாயக்கா, குலசேகரா ஆகிய இருவரும் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து 239 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மேத்யூ வடே 9 ஓட்டங்களும், டேவிட் வார்னர் 6 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய வாட்சன் 7 ஓட்டங்களுடனும், பீட்டர் பாரஸ்ட் 2 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
சற்றுமுன் வரை அவுஸ்திரேலியா அணி 4.4 ஓவருக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இன்னும் 45.2 ஓவரில் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

நியூசிலாந்து அணி வீரர்களுக்கு ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை

நியூசிலாந்து கிரிக்கட் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஜெசி ரைடர், டக் பிரேஸ்வெல் ஆகியோருக்கு ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கட் விதிமுறைப்படி காயம் அடைந்த வீரர்கள் மது அருந்தக் கூடாது. இதனை மீறிய இருவரும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், நேப்பியரில் உள்ள ஓட்டலில் ரைடர், பிரேஸ்வெல் மது குடித்தது தெரியவந்தது. போதையில் இவர்கள் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்காக வருத்தம் தெரிவித்தனர்.
ஆனாலும் காயம் அடைந்த வீரர்கள் மது குடிக்கக் கூடாது. விதிமுறையை மீறிய இவர்கள், நாளை நடக்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேஸ்வெல் தொடை பிடிப்பாலும், ரைடரின் கையில் லேசான காயத்தாலும் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்டது ஏன்: ஷேவாக் விளக்கம்

ஆசிய கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து ஷேவாக் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது நீக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தனது நீக்கம் குறித்து ஷேவாக் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஷேவாக் கூறுகையில், எனக்கு முதுகுப் பகுதியில் பிடிப்பு இருந்தது. நான் தான் ஓய்வு கேட்டேன்.
எனது காயம் பற்றி அனைவருக்கும் தெரியும். உடற்தகுதியை பொறுத்தவரை அணி நிர்வாகத்திடம் மறைத்தது இல்லை. முன்பு தோள்பட்டை காயத்துக்கு கூட அப்போதைய பயிற்சியாளர் கிறிஸ்டன், தோனியிடம் ஆலோசித்த பின் தான் சிகிச்சை செய்து கொண்டேன் என்றார்.
ஷேவாக் தானாகவே ஓய்வு கேட்டிருந்தால், அதனை தெரிவுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் அப்படியே கூறியிருக்கலாம்.
மாறாக நிருபர்களிடம் இவர், பிசியோதெரபிஸ்ட் ஆலோசனைப்படி தான் ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறினார். தவிர ஷேவாக்கிற்கு தோள்பட்டை காயம் என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
உண்மையில் ஷேவாக் முதுகுப்பிடிப்பால் அவதிப்படுகிறாரா, தோள்பட்டை காயமா அல்லது தோனியின் நிர்பந்தத்துக்கு பணிந்து இந்திய கிரிக்கட் வாரியம் கட்டாய ஓய்வு கொடுத்ததா என்ற குழப்பம் நீடிக்கிறது.
இதுமட்டுமல்லாமல் காம்பீருக்கு துணை அணித்தலைவர் பதவி அளிக்கப்படாமல் விராட் ஹோக்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. தோனிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததால் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.