Friday, March 9, 2012

இளைஞர்களுக்கு வழி விடவே ஓய்வு பெறுகிறேன்: ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கட் அணியில் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அவர்களுக்கு வழிவிட்டு, கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், விக்கெட் கீப்பரும் ஆன ராகுல் டிராவிட் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனது ஓய்வை அறிவித்து பேசினார்.
சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிறது. எனவே, தற்போது அதிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என எண்ணுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இத்தனை வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது எனது ஓய்வின் மூலம் இளைய வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க உதவிகரமாக அமையும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் என்னை வழிநடத்திய பயிற்சியாளர்களுக்கும், என்னை தெரிவு செய்தவர்களுக்கும், நான் விளையாடிய அணிக்கும், எனது அணித்தலைவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
இறுதியாக என்னுடைய ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஒய்வு எனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிட வழி செய்யும் என்று கூறினார். கூட்டத்தில் பேசிய பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன், ராகுல் டிராவிடின் சாதனைகளையும் ஒத்துழைப்பினையும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
1996 ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் அறிமுகமான டிராவிட், இந்திய அணிக்கு 2 ஆண்டுகள் அணித்தலைவர் பதவி வகித்துள்ளார். இதுவரை 13,288 டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்து இந்திய கிரிக்கட் வீரர்களில் அதிக டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்துள்ள இரண்டாவது வீரராக ராகுல் டிராவிட் திகழ்கிறார்.
தனது 16 ஆண்டுகால கிரிக்கட் வரலாற்றில், 12 ஒரு நாள் சதத்தையும், 36 டெஸ்ட் சதத்தையும் எடுத்துள்ளார் ராகுல் டிராவிட். மேலும், கிரிக்கட் வீரர்களிலேயே யாரும் இதுவரை சாதிக்காத அளவிற்கு சுமார் 120 கேட்ச் பிடித்துள்ள ஒரே வீரர் ராகுல் டிராவிட்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment