Saturday, March 3, 2012

ஒரு நாள் கிரிக்கட் போட்டி: தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

நியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்ரிக்கா தொடரை வென்றது.
நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவுற்ற நிலையில் 3வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களில் சுருண்டது.
நியூசிலாந்து அணி சார்பில் பிராண்டன் மெக்கல்லம் 47 ஓட்டங்களும், கோலின், பிராங்களின் இருவரும் தலா 36 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹாசிம் ஆம்லா 76 ஓட்டங்களும், பர்னெல் 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கல் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 43.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்ரிக்க அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதற்கு முன்னர் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் தென் ஆப்ரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment