Friday, March 2, 2012

இலங்கை அணி அசத்தல் வெற்றி

இன்று நடைபெற்ற இலங்கை- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதுவரை 11 லீக் போட்டிகள் முடிந்து விட்டன. இதில் அவுஸ்திரேலியா 19 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
இந்தியாவும், இலங்கையும் 15 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இந்தியா பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டது.
இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் இலங்கை தோற்றால் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றாலோ, போட்டி சமன் செய்யப்பட்டாலோ அல்லது மழையால் ரத்தானாலோ அது இலங்கைக்கு சாதகமாக அமைந்துவிடும்.
பரபரப்பான இந்த போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயவர்த்தனே, தில்ஷான் களமிறங்கினார்கள். இலங்கை 10 ஓட்டங்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது.
தொடக்க வீரர் ஜெயவர்த்தனே டேவிட் ஹஸ்சி பந்தில் ஓட்டம் எடுக்க முற்படுகையில் ஆட்டமிழந்தார். அவர் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து தில்ஷான் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பேட்டின்சன் பந்தில் வடேயிடம்  பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கையின் ஸ்கோர் 17 ஓட்டங்கள் மட்டுமே
தொடக்கத்தில் இலங்கை அணி தடுமாறினாலும் பின்னர் வந்த சங்ககாரா- சந்திமால் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. ஆட்டத்தின் 25வது ஓவரில் இருவரும் அரை சதத்தை தாண்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
சிறப்பாக ஆடிய சங்ககரா 64 ஓட்டங்களிலும், சண்டிமால் 75 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த திரிமன்னே நிலைத்து ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.
43 ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு அதிர்ச்சி தந்தார் டேனியல் கிறிஸ்டியன். 43 வது ஓவரை வீசிய கிறிஸ்டியன் 43 வது ஓவரின் மூன்றாவது பந்தில் பெரேராவையும், நான்காவது பந்தில் சேனநாயகேவையும், ஐந்தாவது பந்தில் குலசேகராவையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அணியை சரிவிலிருந்து மீட்ட திரிமன்னே 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் கடைசி பந்தில் மலிங்கா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஹெராத் 14 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 50 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் 239 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாட தொடங்கிய. தொடக்க ஆட்டகாரர்களாக வாடே, வார்னரும் களம் இறங்கி விளையாடினர்.
மலிங்கா வீசிய 3- வது ஓவரில் வார்னர் 6 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாட்சன், வாடேவுடன் இணைந்து விளையாடினார். வாடே 9 இருக்கும் போது குலசேகரா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் வந்த பாரஸ்ட் 2 ஓட்டங்களில் பெவுலியன் திரும்பினார். அதை தொடர்ந்து வந்த மைக்கேல் ஹஸ்சி வாட்சனுடன் ஜோடி சேர்ந்து விளையாடினர், இவருவம் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் விளையாடினர்.
வாட்சன் அரை சதம் அடித்தார்.சிறப்பாக விளையாடி வந்த மைக்கேல் ஹஸ்சி 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்போழுது அவுஸ்திரேலியாவின் ஸ்கோர் 134 ஓட்டங்களாக இருந்தது.
பின்னர் களம் வந்த டேவிட் ஹஸ்சி வாட்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். சிறப்பாக விளையாடி வந்த வாட்சன் 65 ஓட்டங்கள் அடித்திருந்த போது மலிங்கா பந்து வீச்சில் போல்டு ஆனார்.
அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற டேவிட் ஹஸ்சி மற்றும் இறுதிவரை போராடினார். கடைசி ஓவருக்கு மட்டும் 10 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.
குலசேகரா வீசிய இறுதி ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்று பவுண்டரி எல்லையில் தில்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டேவிட் ஹஸ்சி. இதனால் இலங்கை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் வெற்றியை அடுத்து இந்திய அணி இறுதி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தகர்ந்தது.

No comments:

Post a Comment