Saturday, March 3, 2012

அவுஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதும் முதல் இறுதிப்போட்டி நாளை ஆரம்பம்

சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரில் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 ஓட்டங்களில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இலங்கை அணி வெற்றி பெற்றதால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
லீக் முடிவில் இலங்கை, அவுஸ்திரேலியா இரு அணிகளும் தலா 19 புள்ளிகளை பெற்று உள்ளது. லீக் ஆட்டங்களில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை அதிக முறை வீழ்த்தியுள்ளதால் முதல் இடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்த இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி 15 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து வெளியேறியது.
இதனையடுத்து அவுஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் இறுதி போட்டி 3 ஆட்டங்களாக நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒரே அணி முதல் 2 இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்றால் 3 வது இறுதிப்போட்டி நடைபெறாது.
முதல் இறுதிப்போட்டி பிரிஸ்டேனில் நாளை நடைபெற உள்ளது. இதுவரை அவுஸ்திரேலியா அணி லீக் ஆட்டங்களில் இலங்கையிடம் 3 முறை தோற்றுள்ளது. இதற்கு அவுஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக கடந்த லீக் ஆட்டங்களில் விளையாடாமல் இருந்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் நாளை நடைபெற உள்ள முதல் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீட்டர் பாரஸ்ட் நீக்கப்படுவார். அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் பலவீனமாகவே உள்ளது.
டேவிட் ஹஸ்சி ஒருவரே அனைத்து ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி வருகிறார். டேவிட் வார்னரும், மேத்யூ வடேயும் தான் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள்.
நேற்றைய ஆட்டத்தில் வாட்சன் 3 வது வீரராக வந்து சிறப்பாக விளையாடினார். இதனால் அவர் தொடர்ந்து 3 வது வீரராகவே விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment