Sunday, January 8, 2012

முரளிதரன் இன்றி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்றுள்ளோம் : டில்ஷான்

தமது அணி தொடர்பான விமர்சனங்களுக்கு மத்தியில் டேர்பனில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றமை அழிக்க முடியாத ஒன்றென இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் டி.எம்.டில்ஷான் கூறியுள்ளார்.
முரளி ஒய்வு பெற்ற பின்னர் இலங்கைக்கு வெளியே இலங்கை அணியால் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற முடியாது என அனைவரும் எண்ணியிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமது அணியால் அதனை செய்ய முடியும் என அனைவராலும் தற்போது புரிந்து கொள்ள முடியும் எனவும் டில்ஷான் கூறியுள்ளார்.
எனினும் மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற ஆட்டக்கணக்கில் இலங்கை அணி தொடரை இழந்திருந்தது.
அணியாக இந்த தோல்விக்கான பொறுப்பினை தாம் ஏற்றுக் கொள்வதாக கேப்டவுணில் நிறைவடைந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பின்னர் டில்ஷான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இறுதி டெஸ்ட் போட்டியில் ஒரணியாக இணைந்து சிறந்த முறையில் பந்துவீசியமையே போட்டியில் வெற்றிபெற காரணம் என தென்னாபிரிக்க அணித் தலைவர் கூறியுள்ளார்.
அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பான முறையில் செயற்பட்டதன் காரணமாக இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுக்க முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் 2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

அவுஸ்திரேலிய ரசிகர்களிடையே அதிகரித்திருக்கும் டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம்

இந்தியா - அவுஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியாவில் மட்டும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் டி.வி.யில் பார்த்து ரசித்துள்ளனர்.
இது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை டி.வி.யில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட சுமார் 4 லட்சம் அதிகமாகும். பொதுவாக ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்தான் அவுஸ்திரேலியாவில் பிரபலமானது.
இதில் வெற்றி பெறுவதை அவுஸ்திரேலியர்கள் மிகப் பெரும் கெளரவமாகக் கருதுவார்கள். இதனால் அப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும்.
ஆனால் இப்போது நடைபெற்று வரும் இந்தியா - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அதைவிட அதிகமாக ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் முன்னணி துடுப்பாட்டக்காரர்களான சச்சின், சேவாக், திராவிட், லட்சுமண் ஆகியோரை அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அதிக ரன் குவிக்க விடாமல் தடுத்தது. ரிக்கி பொண்டிங், ஹசி, கிளார்க் போன்றவர்களின் அபார ஆட்டம் ஆகியவையும் இப்போட்டிக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது என்று டெய்லி டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Saturday, January 7, 2012

ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

ஐந்தாவது ஐ.பி.எல் டுவென்டி-20 கிரிக்கட் தொடர் சென்னையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி தொடங்குகிறது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 54 நாட்களில் மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளன.
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்) சார்பில் ஆண்டுதோரும் டுவென்டி-20 கிரிக்கட் தொடர் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஐந்தாவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
இத்தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கட் வாரியம்(பி.சி.சி.ஐ) மும்பையில் நேற்று அறிவித்தது. வரும் ஏப்ரல் 4ம் திகதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
கடந்த தொடரில் அறிமுகமான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, சமீபத்தில் ஐ.பி.எல் தொடரில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்ட்டா நைட்ரைடர்ஸ் உட்பட ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன.
மொத்தம் 54 நாட்கள் நடக்கும் இத்தொடரில், 72 லீக் போட்டிகள், மூன்று பிளே-ஆப்(இறுதிச்சுற்றுக்கான தகுதிச் சுற்று), ஒரு இறுதிச்சுற்று உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கின்றன. பெங்களூருவில் இரண்டு பிளே-ஆப் போட்டிகளும், சென்னையில் ஒரு பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி(மே 27) நடக்கிறது.
லீக் போட்டிகள் அனைத்தும் முதல் மூன்று தொடரில் விளையாடியது போல நடக்கும். அதாவது ஒரு அணி, மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை லீக் போட்டியில் விளையாடும்.
இதில் ஒரு போட்டி உள்ளூரிலும், மற்றொரு போட்டி எதிரணியின் ஊரிலும் விளையாடும். லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றுக்கான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
முதல் பிளே-ஆப் போட்டியில் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, இறுதிச்சுற்றுக்கு நேரடியாக முன்னேறிவிடும்.
இரண்டாவது பிளே-ஆப் போட்டியில் 3, 4வது இடத்தில் உள்ள அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, முதல் பிளே-ஆப் போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் மூன்றாவது பிளே-ஆப் போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.

தனிப்பட்ட சாதனைகளைவிட அணியின் வெற்றியே அவசியம் : கிளார்க்







தனிப்பட்ட சாதனைகளைவிட அணியின் வெற்றியே தமக்கு அவசியம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 329 ஓட்டங்களை குவித்திருந்தபோது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொள்வதாக அவர் அறிவித்ததை அடுத்து மைக்கல் கிளார்க்கின் இந்த தீர்மானம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்சமாக சேர். பிரட்மன் 334 ஓட்டங்களைப் பெற்றதுடன் சில வருடங்கள் கழித்து மார்க் டெய்லர் 334 ஒட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று பிரட்மனை விஞ்சக்கூடாது எனக் கருதி தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டிருந்தார்.
இதுபோன்றதொரு எண்ணத்திலா கிளார்க்கும் ஆட்டத்தை இடையில் நிறுத்தியிருப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதினர். எனினும் அந்த சந்தர்ப்பத்தில் தமக்கு பிரட்மனோ அல்லது டெய்ரோ நினைவுக்கு வரவில்லை எனவும், அணியின் வெற்றியை கருத்திற்கொண்டே 329
ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டதாகவும் கிளார்க் தெரிவித்துள்ளார்.

துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவறியமையே தோல்வியடையக் காரணம் : தோனி

முதல் இன்னிங்ஸில் தமது துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவறியமை அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடையக் காரணம் என்று அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
அத்துடன் மைக்கல் கிளார்க்கின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த தவறியமை மற்றுமொரு காரணம் என்று தோனி சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்ற போதிலும், அண்மைக்காலமாக இந்திய அணியால் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் ஒரு இன்னிங்ஸாலும் 68 ஓட்டங்களாலும் இந்தியா தோல்வியடைந்திருந்தது.

Friday, January 6, 2012

இலங்கைக்கு எதிராக தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தென்னாபிரிக்க அணி 2-1 விகிதத்தில் வென்றுள்ளது.
மூன்றாவது போட்டியில் வெற்றி பெறுவதற்கு தென்னாபிரக்க அணிக்கு இரண்டாவது  இன்னிங்ஸில் 2 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன.
தம்மிக பிரசாத் வீசிய முதலாவது பந்து நோபோலாக அமைந்தது. அதே பந்தை அடித்த அல்வீரோ பீட்டர்சன் ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.  இதனால் ஓவர் கணக்கு முறையாக ஆரம்பிப்பதற்கு முன்னரே  தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டியது.
கேப்டவுன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில்  தென்னாபிரிக்க அணி  முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 580 ஓட்டங்களையும் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 239 ஓட்டங்களையும் பெற்றன.
இதனால் பொலோ ஒன் நிலைக்குத் தள்ளப்பட்ட இலங்கை அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
போட்டியின் 4 ஆவது நாளான இன்று திலான் சமரவீர சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களைப் பெற்றார். ஏஞ்சலோ மத்திவ்ஸ் 63 ஓட்டங்களைப்பெற்றார். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி  342 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுளையும் இழந்தது.
தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் ஜக் கலிஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும்  வேர்ணன் பிலாந்தர் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும்  இம்ரான் தாஹிர் 106 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

சிட்னியில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது.
இந்தியா முதல் இன்னிங்சில் 191  ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 659 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கிளார்க் 329, ஹசி 150 ஓட்டங்கள் விளாசினர். 468 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 3வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்தது. ஹில்பன்ஹாஸ் 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
காம்பீர் 68 ஓட்டங்களுடனும், டெண்டுல்கர் 8 ஓட்டங்களுடனும் இன்று 4வது நாள் ஆட்டத்தை ஆடினர். 142 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் காம்பீர் 83 ஓட்டங்கள் எடுத்து பீட்டர் சிடில் பந்தில் ஆட்டமிழந்தார்.
சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய சச்சின், லட்சமண் அரை சதம் அடித்தனர். பொறுமையாக ஆடிவந்த சச்சினை 80 ஓட்டங்களில் கிளார்க் பெவிலியனுக்கு திருப்பினார்.
141 பந்துகளை சந்தித்த சச்சின் 9 பவுண்டரிகளுடன் இந்த ஓட்டத்தை எடுத்தார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் லட்சுமணை 66 ஓட்டங்களில் ஹில்பன்ஹாஸ் போல்டாக்கினார். அதன் பின்னர் மளமளவென விக்கெட் வீழ்ந்தது. டோனி வந்த வேகத்திலேயே 2 ஓட்டங்களிலும், கோக்லி 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் அஸ்வின், ஜாகீர் அதிரடியாக ஆடினர். ஜாகீர் 35, இஷாந்த் 11 ஓட்டங்களில் வெளியேறினர். அஸ்வின் 76 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 62 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஹில்பன்ஹாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
முடிவில் இந்திய அணி 400 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஹில்பன்ஹாஸ் 5, சிடில் 2, பேட்டின்சன், லயான், கிளார்க் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியால் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3வது டெஸ்ட் வரும் 13ந் திகதி பெர்த் நகரில் தொடங்குகிறது.

கிளார்க்கின் சாதனை பயணம்

சிட்னி மைதானத்தில் முச்சதம் அடித்த முதல் வீரர் மைக்கேல் கிளார்க். இங்கு அதிக ஓட்டங்கள்(329) எடுத்த வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
இதற்கு முன் 1903ல் இங்கிலாந்தின் டிப் பாஸ்டர் 287, 1992ல் வெஸ்ட் இண்டீசின் லாரா 277 ஓட்டங்கள் எடுத்திருந்தனர்.
இரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில், ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் கிளார்க்(329) தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களில் லட்சுமண்(281), பொண்டிங்(257) உள்ளனர்.
அவுஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் கிளார்க், நான்காவது இடம் பெற்றார். முதல் மூன்று இடங்களில் ஹைடன்(380), மார்க் டெய்லர்(334*), பிராட் மேன்(334) உள்ளனர்.
அவுஸ்திரேலிய அணித்தலைவராக இருந்து சொந்த மண்ணில் அதிக ஓட்டங்கள் எடுத்த பிராட்மேனின்(270) சாதனையை கிளார்க் தகர்த்தார்.
டெஸ்ட் அரங்கில் 300 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த 21வது வீரர் கிளார்க். தவிர டெஸ்ட் கிரிக்கட்டில் இந்த இலக்கு 25 முறையாக எடுக்கப்பட்டுள்ளது. பிராட்மேன், லாரா, சேவக், கெய்ல் ஆகியோர் இரு முறை முச்சதம் அடித்துள்ளனர்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி திணறல் ஆட்டம்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 239 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி பாலோ-ஆன் பெற்றது.
தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 580 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின் முதல் இன்னிங்சை தொடக்கிய இலங்கை அணி, இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 149 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியை தென் ஆப்ரிக்க வேகங்கள் போட்டுத்தாக்கினர்.
ஸ்டைன் பந்தில் சங்ககரா(35), மகிளா ஜெயவர்தனா(30), மாத்யூஸ்(1) வெளியேறினர். பிலாண்டர் வேகத்தில் சமரவீரா(11), ஹெராத்(1), தமிகா பிரசாத்(9) நடையை கட்டினர்.
கடைசி நேரத்தில் சண்டிமால்(35) ஓரளவு ஆறுதல் அளிக்க முதல் இன்னிங்சில் இலங்கை அணி 239 ஓட்டங்களுக்கு சுருண்டு பாலோ-ஆன் பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், பிலாண்டர் தலா 3, இம்ரான் தாகிர், மார்னே மார்கல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 
பின் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணித்தலைவர் தில்ஷன்(5), பிலாண்டர் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு துவக்க வீரர் திரிமன்னே(30), சங்ககரா(34), மகிளா ஜெயவர்தனா(12) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 138 ஓட்டங்கள் எடுத்து, 203 ஓட்டங்கள் பின்தங்கி இருந்தது.
சமரவீரா(19), மாத்யூஸ்(28) ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் பிலாண்டர், மார்னே மார்கல், இம்ரான் தாகிர், காலிஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலிய அணி அசத்தல் ஆட்டம்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 482 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. தொடக்கத்தில் கிளார்க், ஹசி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் ஒரு மணி நேரத்தில் 37 ஓட்டங்கள் தான் எடுக்கப்பட்டன. போகப் போக ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தனர். டெஸ்ட் அரங்கில் தனது 16வது சதம் அடித்து, இழந்த பார்மை மீட்டார் ஹசி.
மறுபுறம் கிளார்க்கின் உறுதியான ஆட்டம் நீடித்தது. இந்திய பந்துவீச்சாளர்களை தூசியாக்கிய இவர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக மூன்று சதம் அடித்தார்.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 659 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கிளார்க் 329 ஓட்டங்களுடனும், ஹசி 150 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அவுஸ்திரேலியா 468 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இம்முறை காம்பிர், பட்டின்சனின் முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து ஓட்டக்கணக்கை தொடங்கினார். சேவக் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார்.
அடுத்ததாக காம்பிருடன், டிராவிட் சேர்ந்தார். ஒருபுறம் டிராவிட் நிதானம் காட்ட, மறுபுறம் காம்பிர் வேகம் காட்டினார். சிடில் ஓவரில் 2 பவுண்டரி விளாசிய இவர், லியான் பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பி, தனது 19வது அரைசதம் கடந்தார். அன்னிய மண்ணில் 9 இன்னிங்சிற்கு பின் அடிக்கும் முதல் அரைசதம் இது.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில், ஹில்பெனாஸ் ஓவர்களில் நான்கு பவுண்டரி அடித்த டிராவிட்(73 பந்தில் 29 ரன்கள்), கடைசியில் அவரிடமே போல்டானார்.
ஹாடின் கை நழுவியதால் 66 ஓட்டங்கள் எடுத்திருந்த போது காம்பிர் கண்டம் தப்பினார். அடுத்து வந்த சச்சின் தனது விக்கெட்டை காப்பாற்றுவதிலேயே கவனமாக இருந்தார்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 114 ஓட்டங்கள் எடுத்து, 354 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. காம்பிர் 68 ஓட்டங்களுடனும், சச்சின் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்சில் ஒருமுறை கூட இந்திய அணி 300 ஓட்டங்களை கடந்தது இல்லை. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், கைவசம் 8 விக்கெட் வைத்துள்ள இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதே கடினம் தான்.

Wednesday, January 4, 2012

கலிஸ், பீட்டர்சன் சதம் : வலுவான நிலையில் தென்னாபிரிக்கா

இலங்கை அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க வீரர்களான ஜக் கலிஸ் அல்விரோ பீட்டர்சன் ஆகியோர் சதம் குவித்துள்ளனர்.
கேப்டவுன் நகரில் ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. தென்னாபிரிக்க அணி இன்றைய ஆட்டமுடிவின்போது 3 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக  களமிறங்கிய அணித்தலைவர் கிறேம் ஸ்மித் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  3ஆவது வரிசை வீரர் ஹஸிம் அம்லாவும் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும் அதன்பின் ஜோடி சேர்ந்த அல்விரோ பீட்டர்சனும் ஜக் கலிஸு{ம்  3 ஆவது விக்கெட்டுக்காக 206 ஓட்டங்களைப் பெற்றனர். பீட்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.
இதேவேளை தனது 150 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜக் கலிஸ் 150 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்ற 41 ஆவது சதம் இதுவாகும்.
டி வில்லியர்ஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய ஆறாவது வீரர் கலிஸ் ஆவார்.  கடந்த டெஸ்ட் போட்டியில் இவர் இரு இன்னிங்ஸ்களிலும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பந்துவீச்சாளர்களில் தம்மிக பிரசாத் 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்  வெலகெதர 75 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சிட்னி டெஸ்ட்: திணறும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள்

சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்திய வீரர்கள் திணறலான பந்துவீச்சை வெளிப்படுத்த, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 291 ஓட்டங்கள் எடுத்து முன்னிலை பெற்றது.
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 116 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பொண்டிங் 44 ஓட்டங்களுடனும், கிளார்க் 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பொண்டிங், கிளார்க் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை பிரிக்க தோனி எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. கிளார்க், சர்வதேச அரங்கில் 18வது சதம் கடந்தார். 40வது சதம் அடித்த பொண்டிங், 134 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அசத்திய கிளார்க், சர்வதேச அரங்கில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து மிரட்டினார். ஹசி 28வது அரைசதம் கடந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 482 ஓட்டங்கள் எடுத்து, 291 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. கிளார்க் 251 ஓட்டங்களுடன், ஹசி 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

Tuesday, January 3, 2012

191 ஓட்டங்களுக்கு சுருண்டது இந்திய அணி: மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய சச்சின்

சிட்னியில் நடக்கும் 2வது கிரிக்கட் டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.
சிட்னி மைதானத்தில் சதமடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 41 ஓட்டங்களுக்கு வெளியேறி ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமளித்தார்.
சிட்னியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் தோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக சேவக்கும், காம்பீரும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் ஓவரில் 3வது பந்திலேயே காம்பீர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் பேட்டின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சேவக்குடன் டிராவிட் ஜோடி சேர்ந்தார்.
இந்திய அணியின் பெருஞ்சுவர் என கருதப்படும் டிராவிட்டும் ஏமாற்றமளித்தார். 33 பந்துகளை சந்தித்த டிராவிட் வெறும் 5 ஓட்டங்களுக்கு சிடில் பந்தில் ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 30 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் சச்சின் களமிறங்கினார். ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
சேவக் 30 ஓட்டங்களிலும், லஷ்மண் 2 ஓட்டங்களிலும், கோக்லி 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து சச்சினுடன் அணித்தலைவர் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து இந்திய அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிட்னி மைதானம் சச்சினுக்கு மிகவும் பிடித்தமான மைதானமாக இருந்ததால் சச்சின், முதல் இன்னிங்சில் 100வது சதத்தை அடித்து சாதனை படைப்பார் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கும் விதமாக பேட்டின்சன் பந்தில் 41 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் சிட்னியிலும் சச்சின் சாதனை படைப்பது முதல் இன்னிங்சில் முடியாமல் போனது.
இதன் பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த ஜாகிர்கான், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 191 ஓட்டங்களில் முடிந்தது.
வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து திரும்பிய போதிலும், அணித்தலைவர் தோனி மட்டும் சிறப்பாக விளையாடி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். அவுஸ்திரேலியா அணி சார்பில் பேட்டின்சன் 4 விக்கெட்களையும், ஹிபன்ஹாஸ், சிடில் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் போட்டியின் இலங்கை அணி விபரம்

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்ட வீரர் உபுல் தாரங்க, பந்துவீச்சாளர்கள், லசித் மாலிங்க, நுவன் குலசேகர, கோசல குலசேகர ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை வீரர்களில் அறுவர், 3 ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் இலங்கைக்கு திரும்பவுள்ளனர்.
திலான் சமரவீர, தரங்க பரணவிதான, துமித் கருணாரட்ன, கௌஷல் சில்வா, சானக வெலகெதர, கனிஷ்க எல்விட்டிகல ஆகியோரே ஒருநாள் போட்டிகளுக்கு முன் தாயகம் திரும்பவுள்ள இலங்கை வீரர்களாவர்.
வளர்ந்துவரும்  நட்சத்திரமான ஜீவன் மெண்டிஸ் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை.
இதேவேளை டெஸ்ட்  போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசிக்கத் தவறிய மஹேல ஜயவர்தன, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்க ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் துடுப்பாட்ட வரிசையில் மேலுயர்த்தப்படலாம் எனவும் இலங்கை அணி வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை -  தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சுற்றுப்போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளது.
தென்னாபிரிக்காவுடனான போட்டிகளுக்கான இலங்கை அணி விபரம்:
திலகரட்ன தில்ஷான் (தலைவர்), ஏஞ்சலோ மத்திவ்ஸ் (உபதலைவர்), உபுல் தரங்க, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன, திசேர பெரேரா, கோசல குலசேகர, நுவன் குலசேகர, லஷித் மாலிங்க, தம்மிக பிரசாத், தில்ஹார பெர்னாண்டோ, ரங்கன ஹேரத், அஜந்த மெண்டிஸ்.

தீர்க்கமான மூன்றாவது டெஸ்ட் இன்று : இலங்கை - தென்னாபிரிக்க அணிகள் மோதல்


தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, கேப்டவுன் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
முதல் இரு போட்டிகளில் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றுள்ள இவ்விரு அணிக்கும் இன்று ஆரம்பமாகவுள்ள இறுதி டெஸ்ட் சவால்மிக்கதாகும்.
இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து ஆஷ்வெல் பிரின்ஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அல்விரோ பீட்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக டர்பன் டெஸ்டில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலேண்டர், முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் மற்றும் தில்ஹார பெனாண்டோ ஆகியோர் உபாதைக்கு உள்ளாகியிருப்பதால் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

தவறுகளைத் திருத்திக்கொண்டு தமது அணி சிறப்பாக விளையாடும் : தோனி

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு சிட்னியில் நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமது அணி சிறப்பாக விளையாடும் என இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.
தமது அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமைவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா ஒன்றுக்கு பூச்சியம் என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிட்டி டெஸ்ட் போட்டியில் பொண்டிங்கின் சதத்தை எதிர்பார்க்கிறேன் : மைக்கேல் கிளார்க்

சிட்னி டெஸ்ட் போட்டியில் பொண்டிங் சதத்தை எதிர்பார்க்கிறேன் என்று அவுஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் சதமடித்து 100-வது சதம் என்ற மைல்கல்லை சச்சின் எட்டுவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் கிளார்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பொண்டிங், சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை. இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. டெஸ்ட் போட்டியில் அவர் சதமடித்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
சிட்னி டெஸ்ட் குறித்து கிளார்க் மேலும் கூறியது:
சிட்னி போட்டியிலும் எங்கள் வெற்றி தொடரும். முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றி உற்சாகம் அளித்துள்ளது. சிட்னியில் பொண்டிங் சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே இப்போட்டியில் அவரது சதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சச்சினின் 100-வது சதம் குறித்து இப்போட்டியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நான் பலமுறை அவரது விளையாட்டைப் பார்த்து வியந்து இருக்கிறேன். அவரை விரைவில் ஆட்டமிழக்கச் செய்வதன் மூலமே அணியின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் சச்சினை சதமடிக்க விடமாட்டோம் என்பதை மறைமுகமாகவும், நகைச்சுவையாகவும் குறிப்பிட்ட கிளார்க், சச்சினின் 100-வது சதத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்து மகிழ ஆசைப்படுகிறேன். எனவே அவர் அடுத்த டெஸ்ட் தொடரில் வேண்டுமானால் சதம் அடித்துக் கொள்ளலாம் என்றார்.