Wednesday, January 4, 2012

கலிஸ், பீட்டர்சன் சதம் : வலுவான நிலையில் தென்னாபிரிக்கா

இலங்கை அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க வீரர்களான ஜக் கலிஸ் அல்விரோ பீட்டர்சன் ஆகியோர் சதம் குவித்துள்ளனர்.
கேப்டவுன் நகரில் ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. தென்னாபிரிக்க அணி இன்றைய ஆட்டமுடிவின்போது 3 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக  களமிறங்கிய அணித்தலைவர் கிறேம் ஸ்மித் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  3ஆவது வரிசை வீரர் ஹஸிம் அம்லாவும் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும் அதன்பின் ஜோடி சேர்ந்த அல்விரோ பீட்டர்சனும் ஜக் கலிஸு{ம்  3 ஆவது விக்கெட்டுக்காக 206 ஓட்டங்களைப் பெற்றனர். பீட்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.
இதேவேளை தனது 150 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜக் கலிஸ் 150 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் பெற்ற 41 ஆவது சதம் இதுவாகும்.
டி வில்லியர்ஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய ஆறாவது வீரர் கலிஸ் ஆவார்.  கடந்த டெஸ்ட் போட்டியில் இவர் இரு இன்னிங்ஸ்களிலும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பந்துவீச்சாளர்களில் தம்மிக பிரசாத் 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்  வெலகெதர 75 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

No comments:

Post a Comment