Friday, January 6, 2012

இலங்கைக்கு எதிராக தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  தென்னாபிரிக்க அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தென்னாபிரிக்க அணி 2-1 விகிதத்தில் வென்றுள்ளது.
மூன்றாவது போட்டியில் வெற்றி பெறுவதற்கு தென்னாபிரக்க அணிக்கு இரண்டாவது  இன்னிங்ஸில் 2 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன.
தம்மிக பிரசாத் வீசிய முதலாவது பந்து நோபோலாக அமைந்தது. அதே பந்தை அடித்த அல்வீரோ பீட்டர்சன் ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.  இதனால் ஓவர் கணக்கு முறையாக ஆரம்பிப்பதற்கு முன்னரே  தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டியது.
கேப்டவுன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில்  தென்னாபிரிக்க அணி  முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 580 ஓட்டங்களையும் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 239 ஓட்டங்களையும் பெற்றன.
இதனால் பொலோ ஒன் நிலைக்குத் தள்ளப்பட்ட இலங்கை அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
போட்டியின் 4 ஆவது நாளான இன்று திலான் சமரவீர சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களைப் பெற்றார். ஏஞ்சலோ மத்திவ்ஸ் 63 ஓட்டங்களைப்பெற்றார். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி  342 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுளையும் இழந்தது.
தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களில் ஜக் கலிஸ் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும்  வேர்ணன் பிலாந்தர் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும்  இம்ரான் தாஹிர் 106 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

No comments:

Post a Comment