Friday, January 6, 2012

அவுஸ்திரேலிய அணி அசத்தல் ஆட்டம்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 482 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. தொடக்கத்தில் கிளார்க், ஹசி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் ஒரு மணி நேரத்தில் 37 ஓட்டங்கள் தான் எடுக்கப்பட்டன. போகப் போக ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தனர். டெஸ்ட் அரங்கில் தனது 16வது சதம் அடித்து, இழந்த பார்மை மீட்டார் ஹசி.
மறுபுறம் கிளார்க்கின் உறுதியான ஆட்டம் நீடித்தது. இந்திய பந்துவீச்சாளர்களை தூசியாக்கிய இவர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக மூன்று சதம் அடித்தார்.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 659 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கிளார்க் 329 ஓட்டங்களுடனும், ஹசி 150 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அவுஸ்திரேலியா 468 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இம்முறை காம்பிர், பட்டின்சனின் முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து ஓட்டக்கணக்கை தொடங்கினார். சேவக் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார்.
அடுத்ததாக காம்பிருடன், டிராவிட் சேர்ந்தார். ஒருபுறம் டிராவிட் நிதானம் காட்ட, மறுபுறம் காம்பிர் வேகம் காட்டினார். சிடில் ஓவரில் 2 பவுண்டரி விளாசிய இவர், லியான் பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பி, தனது 19வது அரைசதம் கடந்தார். அன்னிய மண்ணில் 9 இன்னிங்சிற்கு பின் அடிக்கும் முதல் அரைசதம் இது.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில், ஹில்பெனாஸ் ஓவர்களில் நான்கு பவுண்டரி அடித்த டிராவிட்(73 பந்தில் 29 ரன்கள்), கடைசியில் அவரிடமே போல்டானார்.
ஹாடின் கை நழுவியதால் 66 ஓட்டங்கள் எடுத்திருந்த போது காம்பிர் கண்டம் தப்பினார். அடுத்து வந்த சச்சின் தனது விக்கெட்டை காப்பாற்றுவதிலேயே கவனமாக இருந்தார்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 114 ஓட்டங்கள் எடுத்து, 354 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. காம்பிர் 68 ஓட்டங்களுடனும், சச்சின் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்சில் ஒருமுறை கூட இந்திய அணி 300 ஓட்டங்களை கடந்தது இல்லை. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், கைவசம் 8 விக்கெட் வைத்துள்ள இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதே கடினம் தான்.

No comments:

Post a Comment