Tuesday, January 3, 2012

191 ஓட்டங்களுக்கு சுருண்டது இந்திய அணி: மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய சச்சின்

சிட்னியில் நடக்கும் 2வது கிரிக்கட் டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.
சிட்னி மைதானத்தில் சதமடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 41 ஓட்டங்களுக்கு வெளியேறி ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமளித்தார்.
சிட்னியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் தோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக சேவக்கும், காம்பீரும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் ஓவரில் 3வது பந்திலேயே காம்பீர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் பேட்டின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் சேவக்குடன் டிராவிட் ஜோடி சேர்ந்தார்.
இந்திய அணியின் பெருஞ்சுவர் என கருதப்படும் டிராவிட்டும் ஏமாற்றமளித்தார். 33 பந்துகளை சந்தித்த டிராவிட் வெறும் 5 ஓட்டங்களுக்கு சிடில் பந்தில் ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 30 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் சச்சின் களமிறங்கினார். ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
சேவக் 30 ஓட்டங்களிலும், லஷ்மண் 2 ஓட்டங்களிலும், கோக்லி 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து சச்சினுடன் அணித்தலைவர் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து இந்திய அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிட்னி மைதானம் சச்சினுக்கு மிகவும் பிடித்தமான மைதானமாக இருந்ததால் சச்சின், முதல் இன்னிங்சில் 100வது சதத்தை அடித்து சாதனை படைப்பார் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கும் விதமாக பேட்டின்சன் பந்தில் 41 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் சிட்னியிலும் சச்சின் சாதனை படைப்பது முதல் இன்னிங்சில் முடியாமல் போனது.
இதன் பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த ஜாகிர்கான், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 191 ஓட்டங்களில் முடிந்தது.
வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து திரும்பிய போதிலும், அணித்தலைவர் தோனி மட்டும் சிறப்பாக விளையாடி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். அவுஸ்திரேலியா அணி சார்பில் பேட்டின்சன் 4 விக்கெட்களையும், ஹிபன்ஹாஸ், சிடில் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

No comments:

Post a Comment