Friday, March 9, 2012

ஆசிய கிண்ணப் போட்டியை பழிதீர்க்கும் போட்டியாக நினைக்க மாட்டோம்: மிஸ்பா உல் ஹக்

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியை பழிதீர்க்கும் போட்டியாக நினைக்க மாட்டோம் என பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் வரும் 11ம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி, அந்நாட்டின் கராச்சி நகரில் இருந்து புதன்கிழமை இரவு விமானம் மூலம் புறப்பட்டது.
அந்நேரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது மிஸ்பா கூறியதாவது, கடந்த உலக கிண்ண அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி கண்டதால் அதற்கான பழிவாங்கும் போட்டியாக ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியாவுடனான போட்டியை பார்க்க மாட்டோம்.
அப்படி நினைத்தால் அது எங்களுக்கு நெருக்கடியைத் தான் ஏற்படுத்தும். இந்தியாவுடன் விளையாடும் போது எவ்வித நெருக்கடியையும் எங்களுக்கு நாங்களே ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
இந்தப் போட்டியில் வங்கதேசம் உட்பட எந்த அணிகளையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். சொந்த மண்ணில் விளையாடுவதால் வங்கதேசம் சிறப்பாக ஆடும்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுதோல்வி கண்டதை பாகிஸ்தான் வீரர்கள் மறந்து விட வேண்டாம். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் செய்த தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆசிய கிண்ணத் தொடரைப் பொறுத்த வரையில் இந்தியா, இலங்கை உட்பட அணிகள் பலம் வாய்ந்தவை. அவை நல்ல நிலையில் உள்ளன என்றார்.

No comments:

Post a Comment