Friday, December 23, 2011

சச்சின் அடுத்த போட்டியில் 100 ஆவது சதத்தை பெற வேண்டும் : ஷேன் வோர்ன்

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை அடுத்த டெஸ்ட் போட்டியில் பெற வேண்டும் என தான் விரும்புவதாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வோர்ன் கூறியுள்ளார்.
இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மெல்பேர்னில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சதத்தை அவுஸ்திரேலியாவில் பெறுவார் என தான் கருதுவதாகவும் ஆனால், அதை அவர் மெல்பேர்னில் சாதிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் ஷேன் வோர்ன் கூறினார்.
மெல்பேர்ன் கிரிக்கெட் அரங்கில் ஷேன் வோர்னின் வெண்கலச் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டபோது அவ்வைபவத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே ஷேன் வோர்ன் இவ்வாறு கூறினார்.
145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷேன் வோர்ன். எனினும் டெண்டுல்கரின் விக்கெட்டை 3 தடவைகள் மாத்திரமே ஷேன் வோர்ன் வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய ஷேன் வோர்ன் 45 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய - இந்திய போட்டியானது சச்சின் டெண்டுல்கரின்  185 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 48 சதங்களையும் அவர் பெற்றுள்ளார்.
இறுதியாக கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்காவுடனான உலகக் கிண்ணப் போட்டியின்போது அவர் சதம் குவித்தார்.
அவரின் இறுதி டெஸ்ட்  சதமும் தென்னாபிரிக்காவுக்கு எதிராகவே பெறப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்  போட்டியில் அவர் 145 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

No comments:

Post a Comment