Thursday, December 15, 2011

அதிக ஒருநாள் போட்டிகள்: ஐ.சி.சி. மீது டிராவிட் பாய்ச்சல்

அர்த்தமற்ற வகையில் அதிகளவில் ஒருநாள் போட்டிகளை நடத்துவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) குறைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அதிக ஒருநாள் போட்டிகளுக்குப் பதிலாக முக்கிய 50 ஓவர் போட்டிகள், உலகக் கோப்பை மற்றும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதில் ஐசிசி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள அவர், கிரிக்இன்போவுக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:
1985-ம் ஆண்டில் இருந்தே அதிக அளவில் ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுவதை அர்த்தமற்றது என்று மக்கள் கூறி வருகிறார்கள். அதை குறைப்பதற்கான சரியான தருணம் இதுவாக இருக்கலாம். கடந்த அக்டோபரில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடரின்போது மைதானங்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதற்கு முன் மைதானம் இதுபோன்று காலியாக இருந்ததில்லை. இந்தியா-இங்கிலாந்து தொடர் விறுவிறுப்பில்லாமல் போனதற்கு அந்தத் தொடர் நடைபெற்ற சில வாரங்களுக்கு முன்பு இவ்விரு அணிகளும் 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியதே காரணம்.
அதன்பிறகு நடைபெற்ற இந்திய-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் மைதானங்கள் நிரம்பி வழிந்தன. இந்தப்போட்டிகள் நடைபெற்ற மைதானங்கள் சிறியவை. இங்கு பெரிய அளவில் சர்வதேச அளவிலான போட்டிகள் நடைபெற்றதில்லை. ரசிகர் கூட்டம் குறைந்தது ஒருநாள் போட்டிக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம் என்றார். இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாதுகாக்கப்பட வேண்டும். பகல்-இரவு டெஸ்ட் போட்டி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் முடிவு கைவிடப்படும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச்சில் அபுதாபியில் பகலிரவு முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடினேன். அந்த அனுபவத்திலிருந்தே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்று கூறுகிறேன்.
சில இடங்களில் பனிக் காரணமாக பகலிரவு போட்டியை நடத்துவது சவாலாக இருக்கலாம். அதுபோன்ற இடங்களில் சிவப்பு நிற பந்துகளைப் பயன்படுத்தும்போது பந்து கண்ணுக்கு எளிதாகத் தெரியும் என்றார். கிரிக்கெட் பிதாமகர் என்றழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று திராவிட் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் வெளிநாட்டு வீரர் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment