Friday, December 23, 2011

இந்தியாவுக்கு எதிரான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி நேற்று(21.12.2011) அறிவிக்கப்பட்டது. இதில் பொண்டிங், மைக்கேல் ஹசி உட்பட பல வீரர்கள் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் திகதி மெல்போர்னில் தொடங்குகிறது. இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பொண்டிங், மைக்கேல் ஹசி ஆகியோர் இடம் பெறுவது சந்தேகமாக இருந்தது. ஆனாலும் இவர்களது அனுபவத்துக்கு முக்கியத்துவம் அளித்து மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட தொடக்க வீரர் ஷான் மார்ஷ் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்த தொடக்க வீரர் டேவிட் வார்னர் இடம் பிடித்துள்ளார்.
இவரது முதுகுப்பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பதால், உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் விளையாடும் லெவன் அணியில் இடம் பெறலாம்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய தொடக்க வீரர் கோவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அணியின் தலைவராக மைக்கேல் கிளார்க் நீடிக்கிறார்.
காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், வேகப்பந்துவீச்சாளர் ரேயான் ஹாரிஸ் தெரிவு செய்யப்படவில்லை. இதேபோல தொடக்க வீரர் பிலிப் ஹியுஸ், உஸ்மான் கவாஜா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
பிக் பாஷ் டுவென்டி-20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேகப்பந்துவீச்சாளர் பென் ஹில்பென்ஹாஸ் வாய்ப்பு பெற்றுள்ளார்.
பீட்டர் சிடில், மிட்சல் ஸ்டார்க், ஜேம்ஸ் பட்டின்சன் ஆகிய வேகங்களும் இடம் பிடித்துள்ளனர். சுழற்பந்துவீச்சாளராக நாதன் லியான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டராக டேனியல் கிறிஸ்டியன் இடம் பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர்-துடுப்பாட்ட வீரராக பிராட் ஹாடின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி: மைக்கேல் கிளார்க்(அணித்தலைவர்), ரிக்கி பொண்டிங், மைக்கேல் ஹசி, பிராட் ஹாடின்(விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், கோவன், டேனியல் கிறிஸ்டியன், பீட்டர் சிடில், பென் ஹில்பெனாஸ், ஜேம்ஸ் பட்டின்சன், மிட்சல் ஸ்டார்க், நாதன் லியான்.

No comments:

Post a Comment