Wednesday, December 14, 2011

சேவாக்கின் அதிரடி தொடருமா? : இன்று சென்னையில் மோதும் இந்தியா - மேற்கிந்திய தீவுகள்

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றுவிட்டபோதும், கடைசி ஆட்டத்தையும் வென்று அவுஸ்திரேலியத் தொடருக்கு உற்சாகமாகச் செல்லும் எண்ணத்தோடு களமிறங்குகிறது. அதேநேரத்தில் தொடரை இழந்து விட்டாலும், கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற்று நாடு திரும்ப மேற்கிந்தியத் தீவுகள் முயற்சிக்கும்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் இந்தூர் ஆட்டத்தைப் போலவே சேவாக்கின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின், தோனி, யுவராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
ரோஹித் சர்மாவின் ரன் குவிப்பு இந்த ஆட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலி, கம்பீரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் 55 ரன்கள் குவித்து மீண்டும் பார்முக்கு திரும்பிய ரெய்னா, இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடலாம். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அவர், சேப்பாக்கம் மைதானத்தில் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். இது அவருக்கு கூடுதல் பலம். பின்வரிசையில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆட்டத்தில் வாய்ப்பளிக்கப்படாத இர்ஃபான் பதானுக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ரஞ்சி போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு அழைக்கப்பட்ட அவரை சோதனை முயற்சியாக தேர்வுக்குழுவினர் இந்த ஆட்டத்தில் களமிறக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கடந்த 4 ஆட்டங்களில் இதுவரை பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதால் சிறப்பாக பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அறிமுக ஆட்டத்தில் விளையாடிய ராகுல் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியாவிடம் இழந்தாலும், ஆமதாபாத் போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்காவிட்டாலும், சராசரியாக 25 ரன்கள் எடுத்துள்ளனர். இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கக்கூடும். தொடரை இழந்துவிட்டாலும் வெற்றிபெறும் முனைப்போடு அவர்கள் கடைசி ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அந்த அணியின் கேப்டன் சமி, "எங்கள் அணி வீரர்கள் சென்னை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். எங்களால் இந்த ஆட்டத்தில் வெல்ல முடியும் என்று நினைக்கிறோம். வெற்றிபெறும் முனைப்போடு நாளைய ஆட்டத்தை எதிர்கொள்வோம்' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment