Saturday, February 18, 2012

முதல் 20-20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் 20-20 கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரிச்சர்டு லெவி 13 ஓட்டங்களும், ஹாசிம் ஆம்லா 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ஜுஸ்டின் ஆன்டாங் 32 ஓட்டங்களும், ஜே.பி. டுமினி 41 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியின் நேதன் மெக்கல்லம், ரோன்னி ஹிரா இருவரும் தலா 1 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. மெக்கல்லம் 16 ஓட்டங்களும், கேன் வில்லியம்சன் 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மார்டின் குப்தில் மட்டும் நிலைத்து நின்று ஆடி 5 பவுண்டரி 4 சிக்சர் அடித்து 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மார்டின் குப்தில் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment