Saturday, February 18, 2012

சூதாட்ட புகாரில் பாகிஸ்தான் வீரர் கனேரியா சிக்கினார்

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் டேனிஸ் கனேரியாவுக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக லண்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் டர்ஹாம்-எக்ஸக்ஸ் அணிகளுக்கு இடையிலான் கவுன்டி போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தண்டனை பெற்றுள்ள எக்ஸக்ஸ் அணியின் முன்னாள் வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்டு, கனேரியா மூலமாகவே சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று அரசு வழக்குரைஞர் நிஜெல் பீட்டர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கனேரியா அணுகியதாலேயே வெஸ்ட்பீல்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட ஓவரில் 12 ஓட்டங்களை விட்டுக்கொடுக்குமாறு வெஸ்ட்பீல்டிடம், கனேரியா தெரிவித்துள்ளார் என்றும் நிஜெல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2010-ம் ஆண்டு இந்த வழக்குத் தொடர்பாக கனேரியா கைது செய்யப்பட்டாலும், எவ்வித தண்டனையுமின்றி விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் இப்போது அவருக்கு தொடர்பிருப்பதாக வழக்குரைஞர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் கிரிக்கட் அணியில் கனேரியா சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் சூதாட்டப் புகாரில் சிக்கி சிறைத் தண்டனை பெற்றுள்ள நிலையில், இப்போது கனேரியா சிக்கியுள்ளது பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment