Monday, April 9, 2012

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்காதது மகிழ்ச்சி: பிலான்டர்

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று விளையாடாதது தனக்கு மகிழ்ச்சி என்று தென் ஆப்ரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வெர்னன் பிலான்டர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் 200,000 அமெரிக்க டொலர்கள் அடிப்படை விலையைக் கொண்டிருந்த பிலான்டர், எந்த ஒரு அணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. ஏலத்தில் எந்தவொரு அணியாலும் வாங்கப்பட்டிருக்கவில்லை.
ஐ.பி.எல். போட்டிகளில் பிலான்டர் தெரிவு செய்யப்படாததால் தற்போது அவர் இங்கிலாந்தில் பிராந்தியப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஐ.பி.எல்லில் பங்கேற்காததால் நன்மைகளும் காணப்படுகின்றன, தீமைகளும் காணப்படுகின்றன எனத் தெரிவித்த பிலான்டர், இவ்வாண்டு தான் தெரிவு செய்யப்படாமை தனக்கு சாதகமானது என்று தெரிவித்தார்.
இவ்வாண்டு யூலையில் தென் ஆப்ரிக்க அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்குரிய சிறந்த பயிற்சியாக இங்கிலாந்துப் பிராந்திய அணிகளில் விளையாடிய அனுபவம் பிலான்டருக்குக் காணப்படும் எனக் கருதப்படுகிறது.
7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிலான்டர், இதுவரை 51 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்துவீச்சாளரொருவர் 50 விக்கெட்டுக்களை வேகமாகப் கைப்பற்றியதில் பிலான்டர் இரண்டாவது நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஐ.பி.எல் தொடர்: துடுப்பெடுத்தாடுகிறது டெக்கான் சார்ஜர்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மும்பை அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரக்கெட் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் அணித்தலைவர் குமாரா சங்கக்கரா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பார்த்தீவ் படேல், அடுத்து களமிறங்கிய பாரத் சிப்லி இருவரும் தலா 1 ஓட்டங்களில் ரோகித் சர்மா மற்றும் மலிங்கா பிடியில் ஆட்டமிழந்தனர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகார் டிவான் 7 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய டேனியல் கிறிஸ்டியன் ஓட்டங்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
சற்று முன்பு வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி 3.3 ஓவருக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அடிபட்ட தனது கைவிரல் படத்தை வெளியிட்டார் சச்சின்

ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய மும்பை அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர்கருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவதில் சந்தேகம் நிலவி வருகிறது.
ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மும்பை இண்டியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர். இவர் கடந்த 4ம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பங்கேற்றார்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் போலிஞ்சர் வீசிய 9வது ஓவரின் 5வது பந்து, சச்சினின் கை விரலில் பட்டு காயமானது.
இதனையடுத்து அப்போட்டியில் 16 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த சச்சின், தொடர்ந்து துடுப்பெடுத்தாட முடியாமல் ஓய்வு பெற்று கொண்டார்.
இதனால் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சச்சின் பங்கேற்கவில்லை. சச்சினுக்கு விரலில் தொடர்ந்து வலி இருப்பதால், இன்றைய போட்டியிலும் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நீடிக்கிறது.
இந்நிலையில் டுவிட்டரில் காயமடைந்த தனது கை விரலின் படத்தை வெளியிட்டுள்ள சச்சின் கூறியிருப்பதாவது, கடந்த நான்கு நாட்களாக எனது கைவிரலில் உள்ள ரத்த அழுக்குகளை தினமும் இரண்டு முறை நீக்கி வருகிறேன். இன்னும் எனது கை விரல் குணமாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை இண்டியன்ஸ் - டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் இன்று மோதல்


ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கடந்த போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்பை இண்டியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஒரு போட்டி மட்டும் நடைபெற உள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள இன்றைய 9வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதற்கு முன்பு, மும்பை இண்டியன்ஸ் அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை வீழ்த்தியது.
கடந்த போட்டியில் புனே அணியிடம் குறைந்த ஓட்டங்களில் சுருண்டது. சச்சின் காயமடைந்துள்ளதால் இன்றும் அவர் களம் இறங்குவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
அதிரடி வீரர் ரிச்சர்ட் லெவி எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார். அதேபோல ரோகித் சர்மா, அம்பாதிராயுடு, பொல்லார்டு ஆகியோர் பொறுப்புடன் ஆடினால் அதிகமான ஓட்டங்களை எடுக்கலாம். பந்துவீச்சில் மலிங்காவின் யார்க்கர், ஓஜாவின் சுழல் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெக்கான் அணியை பொறுத்த வரையில், முன்னணி வீரர்கள் இல்லாமல் இருப்பது பலவீனமான ஒன்று. அணித்தலைவர் குமாரா சங்கக்கரா அணியுடன் இணைந்துள்ளதால் அதிரடி இருக்கும்.
டும்னி, ஷிகார்தவான், கேமரூன்ஒயிட், ஹாரிஸ் ஆகியோர் துடுப்பாட்டத்தில் கைகொடுத்தால் வெற்றி பெறலாம்.
மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் துடுப்பெடுத்தாடும் அணி வலுவான இலக்கை எட்ட வாய்ப்புள்ளது.

மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வியடைந்தோம்: கம்பீர்

துடுப்பாட்டம் சரியில்லாததால் தான் தோல்வியடைந்தோம் என்று தொடர் தோல்வியை சந்தித்து வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் அணித்தலைவர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 142 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
கூப்பர் 3 விக்கெட்டும், அமித்சிங், சுவான், திரிவேதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
கொல்கத்தா அணி தொடர்ந்து 2வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோல்வியடைந்தது.
இந்த தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் கவுதம் கம்பீர் கூறுகையில், மோசமான துடுப்பாட்டத்தால் தான் தோல்வியடைந்தோம்.
எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ராஜஸ்தானை 164 ஓட்டத்துக்குள் கட்டுப்படுத்தினர். ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்தும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ஒரு வெற்றி பெற்றால் நாங்கள் முன்னுக்கு வந்துவிடுவோம். 14 போட்டியில் 2 ஆட்டத்தில் தோற்றதை வைத்து நெருக்கடி என்று சொல்லி விட இயலாது என்றும் கூறியுள்ளார்.

சென்னை, மும்பை இம்முறை பட்டம் வெல்லாது: ஜோதிடர்கள் கணிப்பு

ஐபிஎல் 5வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ச்சியாக 2 முறை பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை ஹாட்ரிக் பட்டம் பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது.
அதேவேளையில் அதிரடி வீரர்களும், ஆல்ரவுண்டர் பட்டாளங்களுடனும் உள்ள மும்பை அணியும் இம்முறை பட்டம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடி வருகிறது
இந்நிலையில் இந்த இரு அணிகளும் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பில்லை என மும்பை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அல்லது டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணியே பட்டம் வெல்லும் என அவர்கள் கணித்துள்ளனர்.
கிரக ராசிப்படி காம்பீருக்குதான் அதிக வாய்ப்புள்ளதாக ஜோதிடர்கள் கருதுகின்றனர். இந்த இரு அணிகள் தவிர புனே, டெல்லி, பெங்களூர் ஆகிய அணிகளுக்கும் சான்ஸ் உண்டாம்.

வலுவான நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சந்தர்பால், பிராத்வைட், எட்வர்ட்ஸ் கைகொடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணி வலுவான ஸ்கோரை நோக்கி செல்கிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் பார்படாசில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் டேரன் சமி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அட்ரியன் பரத்(22) சுமாரான தொடக்கம் கொடுத்தார். பின் இணைந்த கிரெய்க் பிராத்வைட், கிர்க் எட்வர்ட்ஸ் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது.
அவுஸ்திரேலிய வீரர்கள் கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டு ஏமாற்றினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் சேர்த்த போது டேவிட் வார்னர் பந்தில் எட்வர்ட்ஸ்(61) ஆட்டமிழந்தார்.
இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிராத்வைட்(57), பீட்டர் சிடில் வேகத்தில் வெளியேறினார். மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட தேநீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 390 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய சந்தர்பால் 80 ஓட்டங்களுடனும், ரோச் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கங்குலி அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல் லீக் போட்டியில் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐ.பி.எல் தொடரில் நேற்று புனேயில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற புனே அணியின் தலைவர் கங்குலி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
புனே அணிக்கு கங்குலி நல்ல தொடக்கம் தந்தார். பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். இவர் 20 ஓட்டங்களுக்கு வெளியேறினார். பிரவீண் குமாரின் நேரடி த்ரோவில் ஜெசி ரைடர்(8) ஆட்டமிழந்தார்.
பின் உத்தப்பா, மர்லான் சாமுவேல்ஸ் இணைந்து அசத்தினர். பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள், அதிவிரைவாக ஓட்டங்களை சேர்த்தனர். சாமுவேல்ஸ் 46 ஓட்டங்களுக்கு வெளியேறினார். பெர்குசன்(3) ஏமாற்றினார். ஹர்மீத் சிங் பந்தில் உத்தப்பா(40) வீழ்ந்தார்.
போட்டியின் 18வது ஓவரை வீசிய ஹர்மீத் சிங் தொடர்ந்து இரு முறை பீமர்(துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேலே) முறையில் நோ-பால் வீசினார். இது கிரிக்கெட் விதிமுறைப்படி தவறு என்பதால் இவருக்கு பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து எஞ்சிய நான்கு பந்துகளை பிபுல் சர்மா வீசினார். இதில் மூன்று பந்துகளை ஸ்டீவன் ஸ்மித் சிக்சருக்கு அனுப்ப இந்த ஓவரில் மட்டும் 27 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.
பால்க்னர் பந்தையும் சிக்சருக்கு விரட்டிய ஸ்டீவன் 25 ஓட்டங்கள் எடுத்தார். புனே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது. மனிஷ் பாண்டே(12) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அபத்தமாக அமைந்தது. டிண்டா பந்தில் எல்.பி.டபிள்யு.வில் இருந்து தப்பிய வல்தாட்டி, கிரீசில் நிற்க, அவசரப்பட்ட அணித்தலைவர் கில்கிறிஸ்ட் வீணாக ஓடி வந்தார். இதையடுத்து வல்தாட்டி(1) ஆட்டமிழந்து, தனது விக்கெட்டை தியாகம் செய்தார்.
சிறிது நேரத்தில் கில்கிறிஸ்டும்(6) ஆட்டமிழந்தார். மன்தீப் சிங்(24), அபிஷேக் நாயர்(24), டேவிட் ஹசி(18) தாக்குப் பிடிக்கவில்லை. நெஹ்ரா ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த பியுஸ் சாவ்லா 16 ஓட்டங்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் மட்டும் எடுத்து, இரண்டாவது தோல்வியை பெற்றது. பிபுல் சர்மா(35), பிரவீண் குமார்(1) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புதிதாக கட்டப்பட்ட சுப்ரதோ ராய் சகாரா மைதானத்தில், புனே அணி சாதித்துக் காட்டியது. ஏற்கனவே மும்பையை வென்றதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக சாமுவேல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

Thursday, April 5, 2012

காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளில் ஸ்ரீசாந்த் விளையாட மாட்டார்: டிராவிட்

காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் மூன்று போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ராகுல் டிராவிட், ஶ்ரீசாந்த் இன்னமும் முழுமையாகக் குணமடையவில்லை எனத் தெரிவித்தார்.
தனது உடற்தகுதி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஶ்ரீசாந்த், பந்து வீசி பயிற்சி எடுத்தபோது கஷ்டத்தை உணர்ந்ததாக தெரிவித்தார். அத்தொடு 3-4 வாரங்களுக்குத் தான் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்படலாம் என்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீசாந்த் தவிர, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஷேன் வொற்சன், டினேஷ் சந்திமால் ஆகிய வெளிநாட்டு வீரர்களையும் ஆரம்பகட்டப் போட்டிகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணி - மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 27ம் திகதியே நிறைவடையவுள்ள நிலையில் பெரும்பாலான போட்டிகளில் அவர் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மறுபுறத்தில் இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருவதால் அப்போட்டி முடிவடையும் வரை டினேஷ் சந்திமால் - ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை காணப்படுகிறது.

சூதாட்ட விழிப்புணர்வு குறும்படத்தில் முகமது ஆமிர்

கிரிக்கெட் வீரர்களிடையே மேட்ச் பிக்ஸிங் உட்பட பல்வேறு முறைகேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐசிசி ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் வீடியோ குறும்படம் தயாரிக்கப்பட்டது.
5 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தில் மேட்ச்-பிக்ஸிங்கில் சிக்கி சிறைத் தண்டனை பெற்றவரான பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் முகமது ஆமிர் தோன்றுகிறார்.
அதில் மிகவும் உருக்கமாக பேசியுள்ள ஆமிர், சிறை வாழ்க்கை என்பது எல்லோருக்கும் மிக மோசமான இடம். நான் செய்த தவறை யாரும் செய்யாதீர்கள். நான் முட்டாள் ஆக்கப்பட்டேன். எனக்கு துணிவு இல்லாததால் என்னை சூதாட்டக்காரர்கள் அணுகியதை யாரிடமும் சொல்லவில்லை.
எனவே வீரர்களாகிய உங்களை சூதாட்டக்காரர்கள் யாராவது அணுகினால் உடனடியாக ஐசிசி குழுவிடமோ அல்லது உங்களின் அணி நிர்வாகத்திடமோ தெரிவியுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் நான் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், 2 நோபால்களை வீசியதன் விளைவால் அடுத்த சில மணி நேரங்களில் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே சீரழிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, நோபால்களை வீசுவதற்கு சூதாட்டத் தரகர்களிடம் இருந்து பணம் பெற்றதாக பாகிஸ்தான் அணியின் அப்போதைய அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது ஆமிர் ஆகியோர் சிக்கினர்.
இதுதொடர்பாக விசாரித்த லண்டன் நீதிமன்றம், சல்மான் பட்டுக்கு 30 மாதங்களும், முகமது ஆசிபுக்கு ஓர் ஆண்டும், முகமது ஆமிருக்கு 6 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்தது.
இவர்களில் ஆமிர் மட்டும் 3 மாதங்கள் மட்டுமே தண்டனையை அனுபவித்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

வலுவான நிலையில் இங்கிலாந்து

கொழும்பு டெஸ்டில் கெவின் பீட்டர்சன் சதம் அடிக்க இங்கிலாந்து அணி, 181 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணியின் டிராட், குக் அபார ஆட்டத்தை தொடர்ந்தனர். குக்(94), சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ஹெராத் சுழலில் டிராட்(64) சிக்கினார்.
பின் அசத்தலாக ஆடிய பீட்டர்சன், டெஸ்ட் அரங்கில் தனது 20வது சதம் அடித்தார். இவர் 151 ஓட்டங்களுக்கு ஹெராத் பந்தில் வீழ்ந்தார்.
இயான் பெல்(18), பிரையார்(11) சோபிக்கவில்லை. சமித் படேல் 29 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 460 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 185 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இலங்கை சார்பில் ஹெராத் 6 விக்கெட், தில்ஷன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின் இரண்டாவது இன்னிங்சை தொடக்கிய இலங்கை அணி, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தற்போது 181 ஓட்டங்கள் பின்தங்கியிருக்கும் இலங்கை அணி, இக்கட்டான நிலையில் உள்ளது.

Friday, March 9, 2012

இளைஞர்களுக்கு வழி விடவே ஓய்வு பெறுகிறேன்: ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கட் அணியில் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அவர்களுக்கு வழிவிட்டு, கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், விக்கெட் கீப்பரும் ஆன ராகுல் டிராவிட் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனது ஓய்வை அறிவித்து பேசினார்.
சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிறது. எனவே, தற்போது அதிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என எண்ணுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இத்தனை வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது எனது ஓய்வின் மூலம் இளைய வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க உதவிகரமாக அமையும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் என்னை வழிநடத்திய பயிற்சியாளர்களுக்கும், என்னை தெரிவு செய்தவர்களுக்கும், நான் விளையாடிய அணிக்கும், எனது அணித்தலைவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
இறுதியாக என்னுடைய ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஒய்வு எனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவிட வழி செய்யும் என்று கூறினார். கூட்டத்தில் பேசிய பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன், ராகுல் டிராவிடின் சாதனைகளையும் ஒத்துழைப்பினையும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
1996 ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் அறிமுகமான டிராவிட், இந்திய அணிக்கு 2 ஆண்டுகள் அணித்தலைவர் பதவி வகித்துள்ளார். இதுவரை 13,288 டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்து இந்திய கிரிக்கட் வீரர்களில் அதிக டெஸ்ட் ஓட்டங்கள் எடுத்துள்ள இரண்டாவது வீரராக ராகுல் டிராவிட் திகழ்கிறார்.
தனது 16 ஆண்டுகால கிரிக்கட் வரலாற்றில், 12 ஒரு நாள் சதத்தையும், 36 டெஸ்ட் சதத்தையும் எடுத்துள்ளார் ராகுல் டிராவிட். மேலும், கிரிக்கட் வீரர்களிலேயே யாரும் இதுவரை சாதிக்காத அளவிற்கு சுமார் 120 கேட்ச் பிடித்துள்ள ஒரே வீரர் ராகுல் டிராவிட்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிண்ணப் போட்டியை பழிதீர்க்கும் போட்டியாக நினைக்க மாட்டோம்: மிஸ்பா உல் ஹக்

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியை பழிதீர்க்கும் போட்டியாக நினைக்க மாட்டோம் என பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் வரும் 11ம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி, அந்நாட்டின் கராச்சி நகரில் இருந்து புதன்கிழமை இரவு விமானம் மூலம் புறப்பட்டது.
அந்நேரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது மிஸ்பா கூறியதாவது, கடந்த உலக கிண்ண அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி கண்டதால் அதற்கான பழிவாங்கும் போட்டியாக ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியாவுடனான போட்டியை பார்க்க மாட்டோம்.
அப்படி நினைத்தால் அது எங்களுக்கு நெருக்கடியைத் தான் ஏற்படுத்தும். இந்தியாவுடன் விளையாடும் போது எவ்வித நெருக்கடியையும் எங்களுக்கு நாங்களே ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
இந்தப் போட்டியில் வங்கதேசம் உட்பட எந்த அணிகளையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். சொந்த மண்ணில் விளையாடுவதால் வங்கதேசம் சிறப்பாக ஆடும்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுதோல்வி கண்டதை பாகிஸ்தான் வீரர்கள் மறந்து விட வேண்டாம். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் செய்த தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆசிய கிண்ணத் தொடரைப் பொறுத்த வரையில் இந்தியா, இலங்கை உட்பட அணிகள் பலம் வாய்ந்தவை. அவை நல்ல நிலையில் உள்ளன என்றார்.

ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து அவுஸ்திரேலியா முதலிடம்

சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இருப்பினும் அவுஸ்திரேலிய அணி முத்தரப்புத் தொடரில் 11 ஆட்டங்களில் 5-ல் தோல்வி கண்டதால், 3 ரேட்டிங் புள்ளிகளை இழந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியைவிட 9 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது அவுஸ்திரேலியா. ஏப்ரல் 1ம் திகதி வரை அவுஸ்திரேலியா அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் பட்சத்தில் சிறந்த ஒருநாள் அணிக்கான ஐ.சி.சி.யின் பரிசுத் தொகையை தொடர்ந்து 3-வது ஆண்டாக பெற்று விடும்.
அடுத்து அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அதில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்தால் மட்டுமே அவுஸ்திரேலிய அணிக்கு தரவரிசையில் சறுக்கல் ஏற்படும்.
2-வது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியோ, 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணியைவிட ஒரு புள்ளியே அதிகமாகப் பெற்றுள்ளது. இலங்கை அணி 4-வது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து- தென் ஆப்ரிக்கா டெஸ்ட்: முன்னிலையில் நியூசிலாந்து

டுனிடினில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் டுனிடினில் நடக்கிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 191 ஓட்டங்கள் எடுத்தது. ருடால்ப் 46 ஓட்டங்களுடனும், பிலாண்டர் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. பிலாண்டர் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ருடால்ப் அரைசதம்(52) அடித்து வெளியேறினார். இம்ரான் தாகிர் 11வது ஓட்டம் எடுக்க முற்படுகையில் ஆட்டமிழந்ததால், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்தின் மார்டின் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின் முதல் இன்னிங்க்சை தொடக்கிய நியூசிலாந்து அணிக்கு நிக்கோல் 6 ஓட்டங்களிலும், கப்டில் 16 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
மெக்கலம், ராஸ் டெய்லர் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை கொடுத்தனர். இருப்பினும் ராஸ் டெய்லர்(44) அரைசத வாய்ப்பிழந்து திரும்பினார். வில்லியம்சன்(11) நீடிக்கவில்லை. மெக்கலம்(48), வெட்டோரி(46) அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
வான்விக்(36), பிரேஸ்வெல்(25) சற்று ஆறுதல் தந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் பிலேந்தர் 4, மார்கல் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இன்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கி தென் ஆப்ரிக்கா துடுப்பெடுத்தாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி தென் ஆப்ரிக்க அணி 143 ஓட்டங்கள் எடுத்த நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

Saturday, March 3, 2012

அவுஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதும் முதல் இறுதிப்போட்டி நாளை ஆரம்பம்

சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரில் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 ஓட்டங்களில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இலங்கை அணி வெற்றி பெற்றதால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
லீக் முடிவில் இலங்கை, அவுஸ்திரேலியா இரு அணிகளும் தலா 19 புள்ளிகளை பெற்று உள்ளது. லீக் ஆட்டங்களில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை அதிக முறை வீழ்த்தியுள்ளதால் முதல் இடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்த இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி 15 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து வெளியேறியது.
இதனையடுத்து அவுஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் இறுதி போட்டி 3 ஆட்டங்களாக நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒரே அணி முதல் 2 இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்றால் 3 வது இறுதிப்போட்டி நடைபெறாது.
முதல் இறுதிப்போட்டி பிரிஸ்டேனில் நாளை நடைபெற உள்ளது. இதுவரை அவுஸ்திரேலியா அணி லீக் ஆட்டங்களில் இலங்கையிடம் 3 முறை தோற்றுள்ளது. இதற்கு அவுஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக கடந்த லீக் ஆட்டங்களில் விளையாடாமல் இருந்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் நாளை நடைபெற உள்ள முதல் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீட்டர் பாரஸ்ட் நீக்கப்படுவார். அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் பலவீனமாகவே உள்ளது.
டேவிட் ஹஸ்சி ஒருவரே அனைத்து ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி வருகிறார். டேவிட் வார்னரும், மேத்யூ வடேயும் தான் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள்.
நேற்றைய ஆட்டத்தில் வாட்சன் 3 வது வீரராக வந்து சிறப்பாக விளையாடினார். இதனால் அவர் தொடர்ந்து 3 வது வீரராகவே விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் கிரிக்கட் போட்டி: தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

நியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்ரிக்கா தொடரை வென்றது.
நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவுற்ற நிலையில் 3வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களில் சுருண்டது.
நியூசிலாந்து அணி சார்பில் பிராண்டன் மெக்கல்லம் 47 ஓட்டங்களும், கோலின், பிராங்களின் இருவரும் தலா 36 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹாசிம் ஆம்லா 76 ஓட்டங்களும், பர்னெல் 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கல் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 43.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்ரிக்க அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதற்கு முன்னர் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் தென் ஆப்ரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

Friday, March 2, 2012

இலங்கை அணி அசத்தல் வெற்றி

இன்று நடைபெற்ற இலங்கை- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதுவரை 11 லீக் போட்டிகள் முடிந்து விட்டன. இதில் அவுஸ்திரேலியா 19 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
இந்தியாவும், இலங்கையும் 15 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இந்தியா பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டது.
இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் இலங்கை தோற்றால் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றாலோ, போட்டி சமன் செய்யப்பட்டாலோ அல்லது மழையால் ரத்தானாலோ அது இலங்கைக்கு சாதகமாக அமைந்துவிடும்.
பரபரப்பான இந்த போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயவர்த்தனே, தில்ஷான் களமிறங்கினார்கள். இலங்கை 10 ஓட்டங்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது.
தொடக்க வீரர் ஜெயவர்த்தனே டேவிட் ஹஸ்சி பந்தில் ஓட்டம் எடுக்க முற்படுகையில் ஆட்டமிழந்தார். அவர் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து தில்ஷான் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பேட்டின்சன் பந்தில் வடேயிடம்  பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கையின் ஸ்கோர் 17 ஓட்டங்கள் மட்டுமே
தொடக்கத்தில் இலங்கை அணி தடுமாறினாலும் பின்னர் வந்த சங்ககாரா- சந்திமால் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. ஆட்டத்தின் 25வது ஓவரில் இருவரும் அரை சதத்தை தாண்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
சிறப்பாக ஆடிய சங்ககரா 64 ஓட்டங்களிலும், சண்டிமால் 75 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த திரிமன்னே நிலைத்து ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.
43 ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு அதிர்ச்சி தந்தார் டேனியல் கிறிஸ்டியன். 43 வது ஓவரை வீசிய கிறிஸ்டியன் 43 வது ஓவரின் மூன்றாவது பந்தில் பெரேராவையும், நான்காவது பந்தில் சேனநாயகேவையும், ஐந்தாவது பந்தில் குலசேகராவையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அணியை சரிவிலிருந்து மீட்ட திரிமன்னே 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் கடைசி பந்தில் மலிங்கா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஹெராத் 14 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 50 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் 239 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாட தொடங்கிய. தொடக்க ஆட்டகாரர்களாக வாடே, வார்னரும் களம் இறங்கி விளையாடினர்.
மலிங்கா வீசிய 3- வது ஓவரில் வார்னர் 6 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாட்சன், வாடேவுடன் இணைந்து விளையாடினார். வாடே 9 இருக்கும் போது குலசேகரா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் வந்த பாரஸ்ட் 2 ஓட்டங்களில் பெவுலியன் திரும்பினார். அதை தொடர்ந்து வந்த மைக்கேல் ஹஸ்சி வாட்சனுடன் ஜோடி சேர்ந்து விளையாடினர், இவருவம் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் விளையாடினர்.
வாட்சன் அரை சதம் அடித்தார்.சிறப்பாக விளையாடி வந்த மைக்கேல் ஹஸ்சி 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்போழுது அவுஸ்திரேலியாவின் ஸ்கோர் 134 ஓட்டங்களாக இருந்தது.
பின்னர் களம் வந்த டேவிட் ஹஸ்சி வாட்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். சிறப்பாக விளையாடி வந்த வாட்சன் 65 ஓட்டங்கள் அடித்திருந்த போது மலிங்கா பந்து வீச்சில் போல்டு ஆனார்.
அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற டேவிட் ஹஸ்சி மற்றும் இறுதிவரை போராடினார். கடைசி ஓவருக்கு மட்டும் 10 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.
குலசேகரா வீசிய இறுதி ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்று பவுண்டரி எல்லையில் தில்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டேவிட் ஹஸ்சி. இதனால் இலங்கை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் வெற்றியை அடுத்து இந்திய அணி இறுதி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தகர்ந்தது.

சி.பீ.கிண்ண முத்தரப்பு தொடர்: 239 இலக்குடன் அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகிறது

சி.பீ.கிண்ண முத்தரப்பு தொடரின் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி 239 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு கிரிக்கட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
மெல்போர்னில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது.
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஜெயவர்த்தனே 5 ஓட்டங்களும், தி்ல்சன் 9 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய சங்கக்கரா 64 ஓட்டங்களும், சந்திமால் 75 ஓட்டங்களும், திரிமன்னே 51 ஓட்டங்களும் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
சேனநாயக்கா, குலசேகரா ஆகிய இருவரும் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து 239 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மேத்யூ வடே 9 ஓட்டங்களும், டேவிட் வார்னர் 6 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய வாட்சன் 7 ஓட்டங்களுடனும், பீட்டர் பாரஸ்ட் 2 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
சற்றுமுன் வரை அவுஸ்திரேலியா அணி 4.4 ஓவருக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இன்னும் 45.2 ஓவரில் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.