Monday, April 9, 2012

கங்குலி அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல் லீக் போட்டியில் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐ.பி.எல் தொடரில் நேற்று புனேயில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற புனே அணியின் தலைவர் கங்குலி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
புனே அணிக்கு கங்குலி நல்ல தொடக்கம் தந்தார். பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். இவர் 20 ஓட்டங்களுக்கு வெளியேறினார். பிரவீண் குமாரின் நேரடி த்ரோவில் ஜெசி ரைடர்(8) ஆட்டமிழந்தார்.
பின் உத்தப்பா, மர்லான் சாமுவேல்ஸ் இணைந்து அசத்தினர். பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள், அதிவிரைவாக ஓட்டங்களை சேர்த்தனர். சாமுவேல்ஸ் 46 ஓட்டங்களுக்கு வெளியேறினார். பெர்குசன்(3) ஏமாற்றினார். ஹர்மீத் சிங் பந்தில் உத்தப்பா(40) வீழ்ந்தார்.
போட்டியின் 18வது ஓவரை வீசிய ஹர்மீத் சிங் தொடர்ந்து இரு முறை பீமர்(துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேலே) முறையில் நோ-பால் வீசினார். இது கிரிக்கெட் விதிமுறைப்படி தவறு என்பதால் இவருக்கு பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து எஞ்சிய நான்கு பந்துகளை பிபுல் சர்மா வீசினார். இதில் மூன்று பந்துகளை ஸ்டீவன் ஸ்மித் சிக்சருக்கு அனுப்ப இந்த ஓவரில் மட்டும் 27 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.
பால்க்னர் பந்தையும் சிக்சருக்கு விரட்டிய ஸ்டீவன் 25 ஓட்டங்கள் எடுத்தார். புனே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது. மனிஷ் பாண்டே(12) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அபத்தமாக அமைந்தது. டிண்டா பந்தில் எல்.பி.டபிள்யு.வில் இருந்து தப்பிய வல்தாட்டி, கிரீசில் நிற்க, அவசரப்பட்ட அணித்தலைவர் கில்கிறிஸ்ட் வீணாக ஓடி வந்தார். இதையடுத்து வல்தாட்டி(1) ஆட்டமிழந்து, தனது விக்கெட்டை தியாகம் செய்தார்.
சிறிது நேரத்தில் கில்கிறிஸ்டும்(6) ஆட்டமிழந்தார். மன்தீப் சிங்(24), அபிஷேக் நாயர்(24), டேவிட் ஹசி(18) தாக்குப் பிடிக்கவில்லை. நெஹ்ரா ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த பியுஸ் சாவ்லா 16 ஓட்டங்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் மட்டும் எடுத்து, இரண்டாவது தோல்வியை பெற்றது. பிபுல் சர்மா(35), பிரவீண் குமார்(1) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புதிதாக கட்டப்பட்ட சுப்ரதோ ராய் சகாரா மைதானத்தில், புனே அணி சாதித்துக் காட்டியது. ஏற்கனவே மும்பையை வென்றதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக சாமுவேல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment